தொடர்ந்து நாம் சந்தோசமாய்
இருக்க நினைப்பதை
ஏன் தான் இந்த
வார நாட்கள் தின்று தீர்க்கிறதோ?
ஓரிரு தினங்களை உன்னுடன்
கழித்த மகிழ்ச்சி எனை சில நேரங்களில்
ஆர்ப்பரித்துச் சென்றாலும்..
ஏதோ ஒரு வெறுமை உணர்வில் மனசு
உறைந்த படியே!
தூக்கம் என் கண்களை
தழுவிச் செல்ல..
கனவிலும் என் பார்வைகள்;
உன்னில் பதிந்ததாகத் தானே?
உள்ளுக்குள் ஒரு குமைச்சல்..
உள்ளத்தில் ஒரு எரிச்சல்...
புரியவில்லை ஏனென்று?
ஒன்றாய் விழித்து
ஒன்றாய் குளித்து
ஒன்றாகவே சாப்பிட்டு..
பஸ் நிலையம் வரை வருவாயே?
வாகனப் புகைச்சல்
உன்னை மூச்சு முட்டச் செய்தாலும்
எனை வழியனுப்பி விட்டு நீ
கையசைக்கும் போது
இதயம் மிக கடுமையாக
வலிப்பது பற்றி உனக்குத் தெரியுமா?
ஓர் புள்ளியாய்
நீ மறைந்து போகும் வரை
கண் சிமிட்டாமல்
உனையே நான் பார்த்துக் கொண்டிருப்பது
பற்றி அறிய மாட்டாய் நீ!
உன் மார்புக்குள் முகம் புதைத்து
நான் தூங்கும் தூக்கத்தில் தான்
என் அத்தனை புலம்பல்களும் கவலைகளும்
தீர்ந்து போகின்றன!
புது யுகம் காண
புது வழி காட்டிய உனைப் பிரிந்து
நானிருக்கும் ஏழெட்டு மணித்தியாலங்களை
நினைத்தால் தான்
வார நாட்களை கொஞ்சமும்
பிடிப்பதில்லை எனக்கு!!!