சில பெருத்த தலைகளின்
மலட்டு ஆவல்களினால்
என் எதிர்காலமெனும் குழந்தை
இன்னும் ஜனனிக்கவேயில்லை!
காலுடைந்த கிழட்டுப் புலியின் ஏக்கம்
போலவே இன்;னும் அடைய முடியவில்லை
என் இலக்குப் பட்சியை!
சருகாய் போன சானத்துக்கிருக்கும்
மதிப்பு கூட துளியும் இன்றி
என் வானம் இருட்டாகத் தான் எப்போதும்!
சதாவும் ஆழ்மனசிலே எரிமலையின்
குமுறல்கள்..
பூகம்பம் ஓய்வெடுத்துக் கொண்டு
என் மூளையை சுற்ற விட்டு
வேடிக்கை பார்ப்பதாய் ஓர் பிரமை!
தேர்தல் கால அரசியல் வாதியாய்
தோன்றி மறையும் சில சந்தோஷங்கள்!
உலகமே எனக்கெதிராய்
சதி செய்து விட்டு..
பலியை விதிமேல் இட்ட உணர்வொன்று!
என் பூமியை இப்போதெல்லாம்
ஓர் பூதம் விழுங்கிய படியே!
எனினும்..
எதிலோ ஆர்வம் கொண்டு
என் ஆன்மா இன்;னும் வாழ்வதற்கு
பூஜித்துக் கொண்டே..!!!