தூரலாய் வந்து என் மனசில்
சங்கமமான மழைத்துளிக்கு
என் இதயம் வெடித்து
சிதறப் போவது பற்றி சிலநேரம்
தெரிந்திருக்கலாம்!
ஒளிக்கீற்றளவு சந்தோஷங்களை
உள்வாங்க நான் எண்ணியது
இறைவனின்
இயற்கை வண்ண கலையில் தான்!
தன் மடியிலே
அலைகளை
ஆராதித்துக் கொண்டிருக்கிறது
கடல்!
தூய அன்புடன்
அலையைத்தழுவ முற்படும் போதெல்லாம்..
ஏமாற்றி விட்டு கரையைத்தானே
அணைக்க விளைகிறது இந்த அலை?
வெண்முகில் கூட்டங்கள் ஒன்று கூடி
கருமையை உருவாக்குவது போல்
சின்னச்சின்ன கவலைகள்
தம் வலைகளுக்குள்
என்னையும் வலுக்கட்டாயமாக
உள்ளீர்க்கிறது!!!