என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Friday, June 25, 2010

கரையான் பக்கங்கள் !

மழை கருக்கொள்ளும்
படிமங்களில் எல்லாம்
எரிந்து போன என் சுவாசத்தின்
சாம்பல் எல்லாம்
உருப்பெறுகிறது!

எரிமலையில் பூத்துப் போன
மலர்களுக்கு
வேர்களின் வேதனை புரிவதேயில்லை!

குருதி வழியும் கொடூரங்களின்றி
இருக்கும் ஆகாயம் நோக்குகிறேன்
ஓ...
ஒரு காலத்தில்
பூமியின் காதலனாமே அது?

சாக்கடையில் பூத்ததென்றும்
பூக்கடையில் வேர்த்ததென்றும் பாராமல்
புணர்ச்சி செய்து விட்டுப் போகிற தென்றலை
மிதித்து நசுக்க
யாருக்கிங்கே துணிவிருக்கிறது?

உண்மை தனை உரைத்து விட
செய்யப்படும் கட்டுமானங்கள்
எல்லாம்
செப்டெம்பர் பதினொன்றாய்
இடிந்து போகிறது!

கனன்றெரியும் செந்தீயில்
குளித்தெழுந்தாலும்
தங்கத்துக்கு மட்டும் ஏனோ
தீக்காயங்கள் அறவேயில்லை!

தேசம் விட்டு பறந்து திரியும்
பறவையின்
வலியுள்ள சிறகுகள் பற்றி
யாருக்குத் தெரியும்?

வெறும் பார்வை ஒன்றினால் தடவி
ஒத்தடம் பெற்ற ரணங்கள்..
சொற் கோர்வையினால்
மீண்டும் மீண்டும்
குதறப்பட்டுக் கொண்டே!

ஒவ்வொரு தடவையும்
மிக சுவாரஷ்யமாக
ஆரம்பிக்கப்படும்
என் வாழ்க்கை நாவலின்
இறுதி அத்தியாயங்கள் மட்டும்
எப்போதும் கரையான்
தின்றதாகத்தான்!!!