என் அறிவில் பதிந்திடாத
நாமம் கொண்ட மரமே...
உனை பெற்றதென்னவோ
நான் செய்திட்ட தவமே!
இன்று...
உன் இதய வால்வுகள்
அறுந்து தடிக்கின்றன...
கிளைகளை மட்டும் தானே
இழக்கப்போகிறாய் என்று
போலிச் சமாதானம்
ஒன்றைச் சொல்லியே
தேற்ற வேண்டியதாச்சு
எனையே நான்!
ஆனால்...
வேர்விட்டு படர்ந்திருந்த உன்னை
முழுவதுமாய் வெட்டிப் போட்ட
பின்னால் தான் உணர்ந்தேன்
உனை மிகவும் தான்
இழந்து விட்டேன் என்பதை!
மொட்டை மாடிதனிலிருந்து
என் சோகங்களையும்
சுகங்களையும் கூறுகையில்
முகம் சுளிக்காது
அகம் வலிக்காது
எதன்றலின் சிலுசிலுப்பாலும்
இலைகளின் சலசலப்பாலும்
இதயத்துள் இதமூட்டுவாயே!
நீ
தும்பிப் பூச்சியாய்
சிறகடித்து திரியும் சிறார்களின் நந்தவனம்..
சுள்ளி விறகையும் கொடுத்துதவும்
உன் தயாள குணம் அறிந்திருந்ததால்
இப்போது
சிதறுண்டு போயிற்று என் மனம்!
ஈரெண்டு ஆண்டுகளாய்
நீயின்றி நானில்லை வாசகம்
பேசி வஞ்சித்த என்னவளுக்கும்
கள்ளிச்செடி சொந்தம் கூறி
கழுத்தறுத்த கயவர்கள் மத்தியிலும்
நீ
வெறும் மரமல்ல...
என்னை தட்டிக்கொடுத்த
ஆறுதல் கரம்!