என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Tuesday, June 29, 2010

ஒருத்தியின் இதயத் தீ !

தனிமை தான்
இனிமை என்றிருந்தேன்!
இது எவ்வளவு கொடுமை
என்று இன்றுணர்ந்தேன்!

வாழ்க்கை மீதான நம்பிக்கையில்
நம்பி கை வைத்தவை யாவும்
எனக்கெதிராக சதி
செய்தவாறு!

உலகத்தின் சௌந்தர்யங்களை
கண்கள் தரிசிக்கு முன்பே
ஒதுங்கிட்டாள் பெற்றவள்!
குடித்துக் குடித்தே
விழி பிதுங்கி
நாசமாய் போனார் மற்றவர்!

மணல் வீடு கட்டி
நண்டு பிடிக்க நினைத்த
போதெல்லாம்
கை கட்டி வாய் பொத்தி
உரிமையிழந்த
வேலைக்காரியாய் இருந்திருக்கிறேன்!

புத்தகம் சுமந்து
ஓடியாட எண்ணிய போதும்
முதலாளியின் சின்னவனுடன்
மல்லுக்கட்டவே
நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறேன்!

அன்பென்ற புறா
எனை தீண்டிச் செல்வதற்காக
என்னையே குப்பையாய்
மாற்றி இருந்திருக்கிறேன்!

காற்றெனக்கு
தொட்டில் கட்டி
இயற்கையிடம் பாலருந்தி
நான் உருவாகிட்ட கதை முன்னே
நஞ்செல்லாம் பஞ்சாகத்தான்!!!