வறண்டு கிடந்ததே
என் இதயப் பாலைவனம்!
வந்தாய் நீ தேவதையாய்
இப்போ அது ரோஜாவனம்!
கண்கள் தரிசித்தன
உன் மென் பாதங்களை!
திருவாய் நீ மலர்ந்தால்
ஏற்பேன் அதை வேதங்களாய்!
சத்தியமாய் உனை காதலிக்க
நினைக்கவில்லை முதலில்!
எப்படி பச்சை குத்த முடிந்ததோ
உன் பெயரை என் இதழில்?
உன் அணைப்பின் சுகத்தில்
அணைந்து போயிற்று
அனைத்து வித கவலை!
பிணைப்பால்
இதயப்பிணி தீர்த்து
ஏற்றுக்கொள் இவளை!
நாம் தனித்திருந்த அறைகள் போல
வாசம் தருகிறது
இதயவறைகளும் தான்!
உன்னுடனான நாட்களில்
இதய வால்வுகள் கூட
ஆனந்த அவஸ்தையில் ஏன்?
குருதியில் கூட
உறுதி எனும் விரலால் தானே
வருடினாய்!
வருத்தி எனை திருத்தி
எப்படி என் உள்ளத்தை
திருடினாய்?
பாச விதை நட்டிருந்தேன்..
நேச விருட்சகம்
எட்டி விட்டாய்!
துகள்களான இதயத்தை
அன்புப் பசையால்
ஒட்டி விட்டாய்!
இலக்குகளற்ற வாழ்க்கையை - விடி
விளக்காக மாற்றினாய்!
கலகம் இருந்த மனசுக்குள் - முழு
உலக இன்பமும் ஊற்றினாய்!
திசை மாறி தவித்த போது- விழி
விசை கொண்டு ஈர்த்தெடுத்தாய்!
மோதல் இருந்த உள்ளத்தில்
காதல் வில்லால் போர் தொடுத்தாய்!
காரிகை உன் கண் அசைவில்
கவியெழுதவும் கற்கின்றேன்!
தூரிகையாய் உனை ஏற்க
ஓவியமாய் நிற்கின்றேன்!!!