ஏனென்று புரியவில்லை
என்ன செய்தேன் என்றும்
நினைவில் இல்லை!
நாம் அறியாமலேயே
நம்மை பிரித்து விட்டிருக்கிறது
ஓர்; கண்ணாடிச்சுவர்!
இங்கிருந்து நானும்
அங்கிருந்து நீயுமாய் காணலாம்
தொடுகைகள் ஏதுமின்றி!
சதாவும் என் காதுகளில்
எதிரொலிக்கும்
உன் மதுரக்குரலோசை
இப்போதெல்லாம்
பேரிடியாய் மாறியதேன்?
~நான் உனக்கு மட்டும் தான்|
என்ற உன் சத்திய வசனம்..
சாத்தானிய வசனமாய்ப் போயிற்றே?
நிராயுத பாணியாய் மாறிவிட்ட
என் இதயத்தை விட்டு வைக்காமல்
முற்றுகையிட்டுக் கொண்டது சோகம்!
துப்பாக்கி வார்த்தைகள்
மனசை ரகளையாக்கியதால்
கரிய புகையாய் படிந்து கொண்டது துன்பம்!
மௌனமான முகாரிக்குள்
என் கண்கள்
தனக்கான தாலாட்டை
பாடிக்கொள்கிறது!
கடந்து விட்டன கணநாட்கள்
கண்ணுறக்கம் மறந்து!
படர்ந்து இருக்கும் முட்கள் தான்
நீ எனக்கு தந்த விருந்து!
தூக்கம் கொடூரமாகி
என் இரவுகள் முத்தமிடுவதெல்லாம்
உள்ளத்தால் அழுகிற
என் ஊமைக்காயங்களைத் தான்!!!