என் உள்ளத்துக்குள்
பேனை விட்டு..
என் உயிரில் தொட்டு..
வார்த்தையள்ளி
மனசெழுதும் மடல் இது!
ரோசாப்பூவாய்
வாசம் கசிந்து
நெஞ்சக் கூட்டை ஆர்ப்பரித்த
நாட்களவை!
உனை பலரும்
விரும்பிய போதும்
ஏனோ நீ எனைக் கேட்டு
என்னிடமே
வார்த்தையாடினாய்!
சற்றும் குளிரெடுக்காத
நேரங்களிலும் குளிருவதாய்
பொய்யுரைத்து
என் மார்புச் சூட்டில்
சுகம் காண
ரொம்பவும் பிடிக்கும் உனக்கு!
என் நரம்புகளினூடே
உன் காதலை தூதனுப்பி
உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து
மொத்தமாய் என் உறக்கம்
தின்றதும் நீ!
சூரியன்
கொட்டாவி விட்டெழுந்து
நட்சத்திரங்கள்
அழுது மறையும் முன்பே
~மிஸ்கோல்| அடித்து
என்னை எழுப்பியதும் நீ தான்!
மொட்டவிழ்ந்த உன் மௌனம்
வெகு காலம் செல்லு முன்பே
பூப் பூக்கத் தொடங்கியதேன்?
கனவுகளில் தினமும்
உன்னோடு கூடிய பாராளுமன்றம்
அறிவிப்புகளேதுமின்றி திடீரென
கலைக்கப்பட்டுப் போனது!
உன் அருகாமை
தந்த இங்கிதத்தில்
வெறுமை முளைத்து
பட்ட மரமாய்
மாறிக் கொண்டது!
நிலவெழுந்து
முகம் கழுவும் முன்பே
தீயினை சாட்சி வைத்து...
என் இதயத்தை போலவே
அம்மியையும் மிதித்து...
வேறொருவனுடன்
சென்றுவிட்ட பின்..
உனக்கான இந்த மடல்
அவசியமற்றதாய் உணர்கிறேன்!!!