படை வீரர்களுக்கு மத்தியிலும்
ஊடறுவித் தேடுகிறேன்
என்னவனை!
நாட்டுப் பற்றெல்லாம்
ஒன்றுமில்லை..
எனை பிரிந்த சோகத்தை
தற்காலிகமாக
இடை நிறுத்தவே
இந்த மௌன யுத்தம் என்பதை
நன்கறிந்தவள் நான்!
காதலினை
கண்ணியமாகத்தான்
சமர்ப்பித்தான்!
அன்பினை
முழுமையாகத்தான்
ஒப்புவித்தான்!
அன்று..
வரம்பு என்ற வட்டத்துக்குள்
கட்டுப்பட்டிருந்த
பட்டம் நான்!
வெடி பட்டான் என்றறிந்து
இடி ஒன்றை
சந்தித்தது உள்ளம்!
அன்பின் ஆழத்தை
பிரிவின் நீளத்தில்
உணர்த்திவிட்டுப் போன பின்
~வேண்டாம் வந்து
என்னை உனதாக்கிக் கொள்|
என பல விண்ணப்பங்களும்
போட்டாயிற்று!
எனினும்..
சமாதான ஒப்பந்தம் போலவே
பொய்யாகிப் போயிற்று
என்னவனின் வருகையும்!!!