என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Wednesday, December 19, 2012

எதுவுமில்லை


எல்லோரும் உன்னை எதற்காய்
பார்த்துவிட்டுச் செல்கிறார்கள்?

காசுடன் நீ
கட்டிப்பிடித்து விளையானாய்..
ஏழைகளின் கஷ்டம் புரியாமல்
அவர்களை துன்புறுத்தினாய்!

நீயே மேதை
நீயே அறிவாளி என
உனக்குள் நீயே எண்ணி
ஏனையோரை ஏளனப்படுத்தினாய்!

மற்றவர்களின் பசியை அறிந்திருந்தும்
அவர்களின் முன்
அறுசுவை உணவு பரிமாறி
ஆடம்பரமாய் உண்டாய்!

ஒரு மிடறு தண்ணீருக்கு
கணக்குப் பார்த்த நீ
உனக்காக மட்டும்
குளிர்பானம் வாங்கியருந்தினாய்!

பிள்ளையின் நோயினால்
பிறர் தவித்திருக்க – நீ
உன் பிள்ளைக்கு
விளையாட்டுப் பொருட்களை
வாங்கியடுக்கினாய்!

கால் கடுக்க பலர்
காத்திருப்பது கண்டும்
காரெடுத்து - நீ
திமிராய்ப் போனாய்!

எதிர்வீட்டார்
கவலைகளில் மூழ்கியிருக்க
உன் வீட்டை
இசை வெள்ளத்தால்
மூழ்கடித்தாய்!

புரிந்துகொள்
நேற்றுவரை மனிதனாக
இருந்த நீ
இன்று சடலமாக
மாறிவிட்டாய்!

நீ சேர்த்த
செல்வங்கள்..
புகழ்கள்..
பட்டங்கள்..
எதுவுமில்லை!

அதேபோல்
உனக்காக
உன் பிரிவுக்காக
கண்ணீர்விட..
பிரார்த்திக்க..
கவலைப்படக்கூட
இன்று யாருமேயில்லை!!!

Friday, December 14, 2012

இஸ்லாமிய மெல்லிசைப் பாடல்கள்


01. ஹஜ் பெருநாள் இஸ்லாமிய மெல்லிசைப் பாடல்

பல்லவி

இன்பங்கள் பொங்கும்
இரு பெருநாளிலே....
தியாகத்தை அறிந்தோம் - ஹஜ்
திருநாளிலே!

இறை ஆணையை நிறைவேற்றிய
இப்றாஹீமே – அவர்
திருமகனாய் வந்துதித்த
இஸ்மாயிலே! (II)

அனு பல்லவி

பாலைவன பூமியிலே – உம்
பாதம் பட்ட சோலையிலே
காலை மாலை வேளையிலே
ஹஜ் கடமை செய்வர் ஹாஜிகளே

உழ்ஹிய்யா வழக்கம் தந்த
வரலாறு இது..

தியாகத்தின் மகிமை சொன்ன
நன்னாள் இது..

பொன் நாள் இது (II)

சரணம் - 01

கனவுகளில் நபி இப்றாஹீம் கண்டார்
மகன் இஸ்மாயிலை பலியிடவே...
இணையற்றோன் நாட்டம் என உணர்ந்தே
இறுதியில் அதை நிறைவேற்றவே...

ஹாஜரா அம்மையாரை
அழைத்தார்கள்..
தன் கனவு பற்றி அவரிடமே
உரைத்தார்கள்!

வல்லோனின் ஆணையை உணர்ந்தாரே
அன்னை உணர்ந்தாரே
அன்னை உணர்ந்தாரே!!

சரணம் - 02

இஸ்மாயில் நபி சாந்த சிரிப்புடன்;
இறைவன் நாட்டமே நடக்கும் என்றார்..
கத்தி கழுத்தை அறுக்காமல் போக
பாறையில் எறிந்தாரே இப்றாஹிம் நபி!

பாறை இரண்டாய்
சிதறியது..
அல்லாஹ்வின் வஹி அங்கு
இறங்கியது!

சுவனத்து ஆட்டை அறுப்பீரே
குர்பான் கொடுப்பீரே
குர்பான் கொடுப்பீரே!!


02. ஒளி விளக்காய் வந்தார் நபி நாதரே (மெல்லிசைப் பாடல்)


(பல்லவி)

ஒளி விளக்காய் வந்தார்
நபி நாதரே – அவர்
புகழ் பாட வந்தோம்
புவி மீதிலே! (ii)


(அனு பல்லவி)

அவர்தான் எங்கள் தேன் நபி
சொல்வோம் ஸலவாத்தை
உலகம் செழிக்கும் மழையானார்
உண்மை இவ்வார்த்தை (ii)


(சரணம் 01)

மிஃராஜ் இரவினிலே
அல்லாஹ்வைத் தரிசித்தே
ஐநேர தொழுகையை
பெற்றுத் தந்தார்

தந்தைக்கும் அன்னைக்கும்
கீழ்படியும் மக்களாய்
நாம் ஆதல் சிறப்பென்று
கற்றுத் தந்தார் (ஒளி விளக்காய்)


(சரணம் 02)

மதுவென்றும் மாதுவென்றும்
மாயங்களில் மூழ்கிய
அறியாமை மாந்தர்க்கு
வழிகாட்டினார்

குடியென்றும் சூது என்றும்
சூழ்ச்சிகளில் வாழ்ந்திட்ட
ஜாஹிலிய்ய மக்களுக்கு
தெளிவூட்டினார் (ஒளி விளக்காய்)

Wednesday, November 21, 2012

ராசிக் பரீட் புகழ் மாலை எங்கும்


மனமெங்கும் சந்தோஷம் பொங்கும்
நம் ராசிக் பரீட் புகழ் மாலை எங்கும்
இதயத்தில் இன்பங்கள் தங்கும்
இந்த இன்பங்கள் வேண்டும் என்றென்றும்

வானுயர்ந்த மலைகளின் நடுவே
வாகனப் பாதையின் அருகே
பண்டாரவளை நகரத்தில் அமைந்த
பாடசாலை நம் ராசிக் பரீடே

அழகான சூழலிலே அமைந்த
அதிசயிக்கும் எழிலழகில் நனைந்த
இஸ்லாமிய பாடசாலை இதுவே
அதன் நாமம் ராசிக் பரீடே

மாணவரும், மாணவியரும் சிறந்து
அதிகாலை வேளையிலே பறந்து
அணிவகுத்து வருவதே ஒரு அழகு
அழகாகத் தோன்றும் இந்த உலகு

நிலம் நன்றாய் இருந்தால்தான் நாளும்
விதை நன்றாய் வளர்ந்திடுமே மேலும்
விதை நன்றாய் வளர்வதற்கோர் நாமம்
நன்நிலமாம் ராசிக் பரீட் ஆகும்

அகரவரிசை கற்றுத் தந்த அவர்கள்
ஆசிரியர்களல்லர் அதற்கும் மேலோர்
ஒழுக்கத்தோடு பண்பையும் நமக்கு
ஓங்கியே சொல்லித் தந்த மேலோர்

பார் போற்ற நாம் வாழ என்று
பாதைகளைக் காட்டியே இங்கு
பல்துறையில் நாம் சிறக்க வென்று
படிக்கல்லாய் இருந்தீரே அன்று

உயர்தரத்தில் பாடங்களை நன்றாய்
உண்மையாய் கற்றுத் தந்தீர் பண்பாய்
உயர்வான ஆசிரியர்களே கேளும்
உமக்கென் நன்றிகள் மென்மேலும்

மாணவரின் நலன்களிலே என்றும்
மாறாத அக்கறையால் இன்றும்
அன்பாக வழிநடத்திச் செல்லும்
அதிபருக்கும் நன்றிகள் என்றென்றும்

நவோதய நாமம் பெற்ற பெருமை
நம் பாடசாலை ராசிக் பரீடே
நாமெல்லாம் அதில் கற்றது
நாம் செய்த பெரும் தவமே!!!

Friday, August 10, 2012

தெருப் பிச்சைக்காரி


யாரது...?

எதை எதிர்பார்த்தவளாய்
வீதியோரமாய்க் கிடக்கிறாள்?

அவள்
பெற்றோரின் அன்புக்காய்
ஏங்கியவளா?
சகோதரப் பிணைப்பைக்
காணாதவளா?

காதல் கொண்டு
ஏமாற்றம் அடைந்தவளா?
நட்பெனும் வேஷ வலையில்
சிக்கி சீரழிந்தவளா?

ரோசம் கெட்டு
பாசம் தேடுபவளா?
இரக்கத்துக்காக - கண்
உறக்கம் மறந்தவளா?

நேசத்துக்காக - நெஞ்சில்
நெருப்பள்ளிப் போட்டவளா?
அன்பு பொய் என்பதை
அனுபவித்தும் அறியாதவளா?

வாழவும் சாகவும்
கொடுப்பனமில்லாதவளா?
செத்தாலும் தனியாய் அழுகும்
அநாதைப் பிணம் அவளா?

யாரது...?

எதை எதிர்பார்த்தவளாய்
வீதியோரமாய்க் கிடக்கிறாள்?

காலாவதியாகாத நினைவுகள்


காலவோட்டத்தின்
காய் நகர்த்தலில்
நீயும் நானும் பிரிந்தாலும்
உன் எண்ணம்
என் ஞாபக ஊஞ்சலில் ஆடும்!

கற்பனைகள் வளர்த்து
கவிதைகள் வரைந்து
கவலைகள் மறந்து
நாமிருவரும்
சுதந்திரமாய் திரிந்த காலங்கள்
மனசுக்குள்
காலாவதியாகாமலேயே!

தோள் கொடுப்பான் தோழன்
என்பதற்கிணங்க
என் அத்தனை
உணர்வுகளையும்
உள்ளக் கிடக்கையாக்கி
கண்கள் உனக்காக
கண்ணீர் சொரிகின்றன!

அந்தி மழையில்
ஆனந்தித்த சுகம்..
வெட்ட வெயிலில்
குளிர் நீருக்கலைந்த தவிப்பு..
நுளம்புத் தொல்லையால்
தொலைத்திருந்த
நமதான தூக்கங்கள்..

உப்பு அதிகரித்த
உணவுக்குள் உடனே
நீர்விட்டு அருந்திய பாசம்...

எல்லாமே
என் ஆழ் மனதில்
சதா காலமும்
சஞ்சரித்தபடியே இருக்கும்!

உனக்கான
வாழ்தலின் இருப்பை
உன் தோழன் என்ற முறையில்
உடனே பார்த்துவிட துடிக்கிறேன்!

ஆனால்

அதற்குள்
என் மரணம்
நிகழாதிருக்க வேண்டும்!!!

ரமழானே நீ மீண்டும் வந்திடு


ரமழானே நீ மீண்டும்
வந்திட வேண்டும்..
நல்மாற்றத்தை உள்ளத்தில்
தந்திட வேண்டும்!

தரணியிலே சிறப்பாக
வாழ்ந்திட வேண்டும்..
அல்லாஹ்வின் அருளெம்மை
சூழ்ந்திட வேண்டும்!

காமங்கள் பசி தாகம்
மறைந்திட வேண்டும்..
குற்றங்கள் எமைவிட்டு
கரைந்திட வேண்டும்!

பர்ளான தொழுகைகளை
தொழுதிட வேண்டும்..
கப்ருடைய நிலை எண்ணி
அழுதிட வேண்டும்!

இறை ஆணை எப்போதும்
ஏற்றிட வேண்டும்..
பெற்றோரின் சொல் தினமும்
கேட்டிட வேண்டும்!

அடக்கமாக அனைவரிடமும்
பேசிட வேண்டும்..
அன்புதனை இதயத்தில்
பூசிட வேண்டும்!

பொறுமையை வாழ்க்கையில்
காத்திட வேண்டும்..
நன்மைகளை மறுமைக்காய்
சேர்த்திட வேண்டும்!

தீனுக்காய் எதனையும்
நாம் இழக்க வேண்டும்..
அதில் திளைப்பதற்கு
உள்ளத்தைப் பழக்க வேண்டும்!!!

தற்காலப் பெண்ணியம்


பெண்ணியம் என்றால் என்ன
கண்ணியம் மீறி இருப்பதா?

குட்டைப் பாவாடை அணிந்து
குலுங்கிக் குலுங்கி நடப்பதா?
சட்டை பொத்தான் விலகியிருக்க
அசட்டையாகத் திரிவதா?

பொழுதுபட்ட பின்னாலும்
சாலைகளில் உலா வருவதா?
இருட்டில் தனியாய்ப் போனாலும்
இன்னல் வரக்கூடாது என்பதா?

பட்டு உடல் வெளித் தெரிய
பவனி நிதம் வருவதா? - ஆண்கள்
தொட்டுவிட நினைத்தாலும்
விட்டுவிட வேண்டும் என்பதா?

மார்க்கம் தனை மறந்து
மந்திகள் போல் வாழ்வதா?
வர்க்க பேதம் காட்டிக்கொண்டு
பெருமையுடன் திரிவதா?

விழுமியங்கள் விலக்கி வைத்து
விளம்பரத்தில் நடிப்பதா?
கவர்ச்சி காட்டி செல்வதொன்றே
உயர்ச்சி என்று நினைப்பதா?

கணவனுடைய தேவைகளை
கவனிக்காமல் இருப்பதா?
பிள்ளைகளைக் கவனிக்காமல்
பிரபல்யத்தைத் தேடுவதா?

மகளிர் சங்க கூட்டமென்று
மாதம் முழுவதும் கழிப்பதா?
வயதில் மூத்த அனைவரையும்
வார்த்தைகளால் துளைப்பதா???