என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Wednesday, October 29, 2014

நானும் எனது கவிதைகளும்

என் இதயமெனும் சிறு கடலில்
உன் நினைவெனும் பெருங்கப்பல்
நங்கூரமிட்டபடி!

புராதனங்களில் இருந்து
கண்டெடுத்த கல்வெட்டாய்
என் காதல் இப்போது!

மிகவும் காரிருள் படிந்த
பொழுதொன்றில் தோன்றிய
சிறு நிலவுக் கீற்றைப் போல்
இன்று உன்
தொலைபேசி அழைப்புக்களின் நாதம்!

தூறலும் இருட்டுமாய் இருக்கும்
அந்தி நேர உருவமாய்
நீயும் நானும்
கடைசியாய் சந்தித்துக்கொண்ட
நிமிடங்களின் நினைவுகள்!

புல்வெளிகள் ஏந்திக்கொண்ட
சிறிய பனித்துளிகள் போல்
உன் ஓரப் பார்வையை
நெஞ்சில் சுமந்தபடி
நானும் எனது கவிதைகளும்!

Monday, October 27, 2014

எல்லாமாக நீ!

ஆர்ப்பாட்டமில்லாத - ஒரு
அழகிய காதலை
எனக்குள் விதைத்தவன் நீ!

காதலானது ஆறு குளம் நதி
என்று வியாபித்திருக்கும் இன்றுகளில்
ஒரு ஆழமான சமுத்திரமாக
எனக்குள் இருப்பவன் நீ!

சோகமாக சோம்பிக் கிடக்கும்
பூந்தோட்ட புஷ்பங்களுக்கெல்லாம்
தென்றலுடன் சிரித்து
தலையாட்டச்
சொல்லிக் கொடுத்தவன் நீ!

ஊடல் கொண்டிருக்கும்
நட்சத்திரங்களுக்கிடையில்
அன்பைப் புரிய வைத்து
அழகான ரோஜாவைப் பரிசளித்தவன் நீ!

நீர்வீழ்ச்சியின் சலசலப்பை
எல்லாம் மொழிபெயர்த்து
சங்கீதமாக்கிப்
பாடியவன் நீ!

கொட்டிவிடும் மழைத்துளிகளை
கையில் ஏந்திவந்து
அவற்றுடன் ரகசியமாய்
பேசிக் கொண்டிருந்தவன் நீ!

மீசை வைத்த புயலாக
என் முன்னே தோன்றி
என் இதயத்தை
வாரிச் சுருட்டி
எடுத்துச் சென்றவன் நீ!

என்னையும் என் அன்பையும்
முழுசாக புரிந்துகொண்டு
எனக்குள்ளே எல்லாமாக
என்றும் இருப்பவன் நீ!

Tuesday, August 5, 2014

மரண வலி

உடைத்து வெளிவந்த
என் அழுகையை
அடைத்து வைத்துக் காத்திருந்தேன்..

முடிந்துவிடாத
உன் பயணத்தை எண்ணி
இடிந்து போய் அமர்ந்திருந்தேன்....

தேக்கி வைத்த
என் சோகங்கள் - நன்றாய்
தாக்கி விட்டது உள்ளத்தை!

புதைத்து வைத்த துன்பங்கள்
மேற்கிளம்பி
வதைத்து என்னை பாடுபடுத்தியது!

வேரோடு என் இதயத்தை
பிடுங்கிச் சென்றுவிட்டாய் - நீ
ஊருக்குப் போகையிலே!

மறைத்து வைத்த
பாசத்தை எல்லாம் மெதுவாய்
உரைத்துவிட்டது உன் பிரிவு!

என் ஜனனத்தின்
மறுபிறப்பாய் நீதானே இருக்கிறாய்
என் மரணத்தின்
வலியாகவும் நீயேதான் இருக்கின்றாய்!

பனித்துளியா நீ?

என் ஞாபகப் புற்களில்
அமர்ந்து கொண்ட
பனித் துளியா நீ?

இதயத்தின் கீதங்களை
மொழிபெயர்த்துப் பாடிய
இளங் குயிலா நீ?

இருட்டாயிருந்த
என் வானத்தில் தோன்றிய
நிலவொளியா நீ?

உள்ளமெனும் கனியை
சுவை பார்த்த
சிறு அணிலா நீ?

மனச் சோலையில்
அழகாய் பூத்த
சிவப்பு ரோஜாவா நீ?

என் மனசை
மெதுமெதுவாய் கொத்தும்
கோழிக்குஞ்சா நீ?

எனக்குள்ளே
பதிந்துபோன
முதல் கவிதையா நீ?

மெது மெதுவாய்
என்னில் உதித்த
வளர் பிறையா நீ?

எனை களவாடிச்
சென்றுவிட்ட
வாலிபக் காற்றா நீ?

எனக்குள்ளே
ஒன்றி விட்ட
என்னவனா நீ?

Thursday, July 17, 2014

நீ ஒரு குழந்தையாக

நெடிதுயர்ந்த
ஒரு ஆலமரம் போன்ற
உன் காதலில்
கூடு கட்டி வாழ்ந்திருக்க
விருப்பம் எனக்குள்!

அருகருகே
இருந்துகொண்டே
நம் வாழ்நாளை
கடத்திவிட
பிரார்த்தனை எமக்குள்!

காதலை மட்டுமே கொண்டு
மற்றதெல்லாம் தவிர்ந்து
ஒரு எல்லையில்லாப் பெருவெளியில்
பயணிக்கிறதெம் உறவு!

தினம்தினம் குறுஞ்செய்திகள்
நள்ளிரவு ரகசியக் குரல்கள்
கடிதங்கள்.. வாழ்த்தட்டைகள்
எதுவுமேயில்லாமல்
யதார்த்தபூர்வமாய்
நகர்கிறது நம் நேசம்!

பக்கத்தில் நீ வந்திருந்தபோதுதான்
என் பெண்மையின் நாணமும்
உன் ஆண்மையின் வீரமும்
சிநேகபூர்வமாகின!

வாழ்வதற்காக காதலே தவிர
காதலுக்காக வாழ்க்கை அல்ல
என்ற நம் சித்தாந்தத்திலிருந்து
என்றுமே நாம் விலக நினைத்ததில்லை!

நீயில்லாத நிமிடங்களில்
உன்னை
என் காதலனாய்
கணவனாய் எண்ணி
கனவுகள் வளர்க்கும் நான்..

கண் பார்வைக்குள் அடங்கி
என்னருகில் நீ இருக்கையில்
உன்னை ஒரு குழந்தையாக
பார்த்து மகிழ்கிறேன்!

காதலுக்குள் தாய்மையும் இருக்கிறது
என்பதைப் புரிய வைத்தவனே..
நீண்ட நாள் பிரிவைத் தாங்க முடியாது..

ஒரு வனாந்தரத்து இருட்டை
எனக்குள் தந்துவிடாமல்
பூக்களால் நிறைந்த
என் இதயத்தை
உனக்குள் வசமாக்கிட வா!!!

Monday, June 23, 2014

வலி..

தாங்க முடியாத சுமையொன்றை
இதயம் எதிர்கொள்வதாய்
வலி..

நாட்கள் எல்லாம்
யுகங்கள் போல் மாறிடுமோ
என்ற தவிப்பு

ஒரு சின்ன அன்பு
இத்தனைக் கண்ணீர்த் துளியை
வருவிக்கும் என்பது
ஆச்சரியம்தான்!

அருகேயற்ற நிமிடங்கள் இனி
எப்படித்தான் கழியப் போகின்றதோ
நானறியேன்..

செல்லக் குறும்புகளும்
சின்னச் சிரிப்பும்
பொய்க் கோபங்களும் பார்க்காமல்
நான் கிட்டத்தட்ட
செத்துப் போய்விட மாட்டேனா?

வெளிக்காட்டவும் தெரியாமல்
அன்புகாட்டவும் தெரியாமல்
ஒதுங்கி நிற்கவும் முடியாமல்
ஒட்டி நிற்கவும் முடியாமல்..

எனக்குள் மட்டும்தான்
இத்தனை உணர்வுகளும்
உள்வாங்கப் பட்டிருக்கின்றதா?

எதிர்திசையில் இதுபோன்ற
எந்தவித சலனங்களும்
இல்லாதிருத்தல் முடியுமா?

மெலிதான நேசம்

உள்ளத்தில் தோன்றும்
தா(க்)கத்தை
போக்கும் வழி என்னவோ?
நெஞ்சில் தோன்றும் துன்பத்தை
தீர்க்கும் வழி என்னவோ?

தண்ணீர் இல்லாத காட்டுக்குள்
தயக்கமின்றி செல்லுவதா?
சாத்தான்கள் இருக்குமிடத்தில்
சத்தியத்தை வெல்லுவதா?

மனசில் எரியும் அக்கினித் தீ
மார்பு வலிக்கச் செய்கிறது..
ஆறுதலுக்கு ஆட்களின்றி
அழுகை வந்து கொல்கிறது!

பாசத்துக்கும் பொறாமைக்கும்
வித்தியாசம் தெரிகிறது..
பாசம் என்பதன் வெள்ளை நிறம்
இப்போது எனக்கு புரிகிறது!

ஆதலால்

அன்பு என்பதன் ஆழ வேர்
அடி மனசில் வளர்கிறது..
மிக மெல்லிய நேசமொன்று
எனக்குள்ளே மலர்கிறது!

எனைப் பிடித்த சோகமெல்லாம்
மெதுமெதுவாய் தேய்கிறது..
அலையடித்த சந்தேகங்கள்
அடியோடு ஓய்கிறது!!!

எரிக்கும் சுவாசம்

உண்மையையும்
உதாசீனத்தையும்
புரிய வைத்ததே நீ தானே..
அப்படியிருக்க
துகள்துகளாக
இதயக் கண்ணாடியை உடைத்துவிட்டு
இப்போது
அது தெளிவாக இல்லை
என்பது ஞாயமா?

பாசத்தை மட்டுமே
பகிரத் தெரிந்த என்னால்
பாசாங்கு பண்ணத்தெரியாது
என்ற உண்மையை அறிந்த பின்பும்
குறை சொல்தல் ஞாயமா?

உயிர்மூச்சின் துளிகளில் எல்லாம்
உனக்கான சுவாசித்தலை செய்த போது
உள்ளுணர்வேயின்றி
உன் அகங்காரத்தை காட்டியது ஞாயமா?

உனக்காக எதையும்
விட்டுக்கொடுக்கத் தயார் என்று நானிருந்தபோது
எதற்காகவும் என்னை இழக்க நீ
தயாராயிருந்தது மட்டும் ஞாயமா?

என் இதயத்தை
உன் விழியிடம் ஒப்படைத்துவிட்டு
சந்தோஷித்திருந்தபோது
அதைப் புழுவாக
சுடுமணலில் இட்டு வதைத்தது ஞாயமா?

இப்போது மட்டுமென்ன
உன் வார்த்தைகளாலும் செய்கையினாலும்
தண்ணீர் வற்றச்செய்த
என் மன நதியில்
நீச்சலடிக்க நீ நினைப்பது
ஞாயமா?









Tuesday, April 8, 2014

அல்லாஹ்வின் சந்நிதானத்தில்

தங்கையே
ஒரு கிராமத்து நதியின்
குளிர்ச்சியாக நீ
எங்கள் நெஞ்சில் நிறைந்திருக்கின்றாய்..

ஒரு நிலாக்கீற்றின்
ஒளி போல - நீ
நீங்கிச் சென்றாலும்
எமக்குள் வாழ்கின்றாய்..

வசந்த காற்று வீசும்
இடத்தில்
ஒரு தென்றலாக
நினைவில் மலர்கிறாய்..

உலகத்தின் அழுக்குகளை
காணக் கூடாதென்றா
கண்மூடிக்கொண்டாய்?

பாவம் செய்யும் நீசர்களின்
முகத்தில் விளிக்க வேண்டாமென்றா
விழி திறக்குமுன்னேயே
உயிர் நிறுத்திக்கொண்டாய்?

நாளை மறுமையில்
சுவர்க்கத்தின் வாசலிலே
ஒரு குழந்தை தேவதையாக
நீ எங்களை
அழைத்துப்போவாய்

அங்கே
நாங்களெல்லாம்
ஒன்றாயிருந்து

உம்மம்மாவின் மடியில்
சாய்ந்திருக்கலாம்
அப்பாவுடனிருந்து
கதைகள் கேட்கலாம்..

நான் .. நீ
உம்மா.. வாப்பாதம்பி.. தங்கை என்ற
நமது குருவிக் கூட்டுக் குடும்பம்
அல்லாஹ்வின் சந்நிதானத்தில்
சந்தோஷமாயிருக்கலாம்!!!

Sunday, January 19, 2014

வாழ்க்கை எனும் நாடக மேடை!


தோற்றத்தில் நைந்துள்ளோமா
ஏற்றத்தில் தொய்ந்துள்ளோமா
மாற்றங்கள் நடக்கும் என்றே
நாற்றத்தில் வாழ்கிறோமா?

கறுத்த உடலோடும், வெயிலோடும்
பெருத்த மழையோடும், பனியோடும்
சிறுத்த லாபத்துக்காகN;வண்டி
பொறுத்துப் பொறுத்து இருக்கிறோமா?

கரிய புகை படிந்த காம்பறாவில்
சிறிய, பெரிய பிள்ளைகளுடன்
அரியதொரு வாழ்வைத்தான்
தெரியாமலே கடத்திவிட்டோம்!

அன்னை போல் மதித்தேதான்
மண்ணை நாம் மிதித்தோமே
பெண்ணையும், ஆணையும்
கண்ணைப் போல் காத்தோமே!

மலை வாழ்க்கை பழகிடுச்சு
இலைசாயம் இனிச்சிடுச்சி
தலை தோறும் வறுமை எனும்
அலை வந்து அடிச்சிடுச்சு!

சாதுவாக வாழ்கின்றோம்
மாதுகளை மதிக்கின்றோம்
தீது என நன்குணர்ந்து
சூது கூட தவிர்த்திருந்தோம்!

சுமை வந்து நெரித்த போதும்
எமைப் பற்றி கவலையில்லை
இமை போல துரை காப்பார்
நமை என்று நம்பி நின்றோம்!

துடுப்பு இல்லா ஓடம் போல
இடுப்பு கடுத்தே வேலை செய்து
அடுப்பு மூட்டிகொஞ்சம் சமைத்து
விடுப்பு பார்க்கும் வாழ்க்கை நமதே!

படித்த இளைஞர் வாழ்க்கையாவும்
குடித்துக் குடித்தே வீணாய் போகும்
வடித்த கண்ணீர் ஆவியாகும்
நடித்த வாழ்க்கை மேடை ஏறும்!

நாளை எப்படி கழியும் என்று
வேளை தோறும் சிந்தித்தேதான்
காலை மாலை ஓலைக் குடிலில்
ஏழை வாழ்க்கை முடிஞ்சு போகும்!!!

Thursday, January 16, 2014

அன்புத் தோழிக்கு

நீ என்மீது
அளவு கடந்த அன்பை காட்டியபோது
என்னால் அதனைப் புரிந்து கொள்ள
இயலவில்லை

அடிக்கடி வருகின்ற
உன் மெஸேஜ்களும்
மிஸ்கோல்களும்
நான் உன்னிடம் பேசாதபோது
நீ கொண்ட கோபமும்
உண்மையில் என்னை
எரிச்சல் அடையவே செய்தன

எனது அன்பை வழிபார்த்து
நீ காட்டிய பாசத்தின் தடயங்கள்
அப்போதெல்லாம்
என் இதயத்தில் பதியவேயில்லை

உன்னை சந்தித்த தருணத்தில்
உன்னிடம் ஏற்பட்ட
அந்த அன்பு கூட
காலப்போக்கில்
காணாமலேயே போனது

கண்ணில் காணாத பொருள்
கருத்திலிருந்து மறையும்
என்ற கூற்றுக்கிணங்க
உன்னை நான்
மறந்தே போனேன் தெரியுமா?

ஆனால்

இன்று
நானும் உன்னைப் போல
ஒரு அன்புக்காக ஏங்குகின்றேன்
உன்னைப் போலவே
மெஸேஜ் பண்ணுகிறேன்
அடிக்கடி மிஸ்கோல் கொடுக்கிறேன்..

நான் எப்படி உன்னை
தவிர்த்துவிட்டேனோ
அதைப் போலவே
இல்லையில்லை
அதையும்விட இப்போது
தவிர்க்கப்படுகிறேன்

என்னில் பாசம் காட்டாத இடத்தில்
நான் வைத்த அன்பு
கண்டுகொள்ளப்படாமல்
அந்தரத்தில் இருக்கிறது

அதனால்தான்
நீ கொண்ட அன்பின் ஆழத்தையும்
பிரிவின் நீளத்தையும்
காலம் இப்போது
நன்றாகவே புரிய வைத்திருக்கிறது!!!