என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Saturday, October 23, 2010

எழுவாய் பயனிலை!



காதலித்து
கண்ணாம்மூச்சியாடி
நீ இன்று
தாய்மைக் கோலத்தில்
தயவாய் வாழ்ந்த படி!

கவிதை எழுதியே
காகிதமாகி
சேற்றில் புதைந்த
செருப்பாய் நான்!

இதயத்தின் வெடிப்புக்களில்
இம்சையின் சித்திரவதை...
உள்ளார்ந்த மனவெளயில்
இன்பமினி எவ்வகை?

இலக்கியமாய் எமைப்பார்த்தால்
நீ எழுவாய் நான் பயனிலை..
சேர்ந்திருந்த நாள் எல்லாம் - இனி
என்ன நினைத்தாலும் பயனிலை!!!

கண்ணீரும் உதிரமாய்!

உன் முகம் நிதம் எண்ணி
என் கண்கள் அழுகிறது...
கண்ணீரும் உதிரமாயிங்கு
உஷ்னமாய் விழுகிறது!

கேலிக்குரியவளாகிறேன்
உன்னுடனிருக்க ஆசைப்பட்டு...
ஒன்றாயிருக்க விரும்புகிறேன்
உன்னுடனேயே வாழ்க்கைப்பட்டு!

ஒன்றில்லை பல(லி) சொல்லும்
உலகுக்கா தெரியாது?
சொல்லட்டும் பிழையில்லை
என் மனசும் சரியாது!

பூமியின் துன்பம் தீர்க்க
மழைத்துளியின் தூறுதலா?
என் நெஞ்சின் சோகம் போக்க
கண்ணீர் தான் ஆறுதலா???

Saturday, October 9, 2010

திருந்திய உள்ளம் !

என் இறைவனே!
உன்னை
எண்ணாத போதிருந்த
காயங்களின் வலி
உன் ஞாபகங்களால்
துதித்து வழிபடுகையில்
காணாமற் போகிறது!

சோகங்களாலும்
சோர்வுகளாலும்
நோவப்பட்ட என் உள்ளம்
நிறைவான அமல்களால்
நிம்மதியாய் இருக்கிறது!

மானிடர்க்குரிய
வேதனைகளும்
துன்பங்களும்
இப்போதெல்லாம்
எனை துரது;துவதில்லை!

ஷைத்தானின்
பிடியில் சிக்கி
என் ஆன்மா
சீரழிவதுமில்லை!

சேதப்பட்டு திருந்திய
என்
இதயத் தோட்டத்தில்
இனி ஒருபோதும்
தீய எண்ணங்களை
வளர விடுவதுமில்லை!!!

விளக்கம் :- அமல்கள் - நற்காரியங்கள்

சாலையோர பூக்கள் !

இதயத்தை கேட்டவளுக்கு
உயிரையே தர
தயாராயிருந்தேன்..
நிஜமாய்!

நம்பிக்கை இல்லை என்றால்
விண்கற்களிடம்
விசாரித்துப் பாருங்கள்..
விண்மீனாய் மாறி
என் காதல் சொல்லும்!

வியர்வை துளிகளை
நுகர்ந்து பாருங்கள்..
என் காதலுக்கு சாட்சியாய்
வாசம் வீசும்!

செவ்வாய்க்கு சென்று
ஆராய்ச்சி செய்யுங்கள்..
அவளின் செவ்வாயில்
நான் சுருண்டதை
வெட்கத்துடன் பகரும்!

சேற்றில் பூத்த
செந்தாமரை பெற்றுள்ள மதிப்பு..
சாலையோர பூக்களுக்கு
இல்லை தான்!

வெட்டாந் தரையில்
வெறுமையாய் இருந்த போதும்
இப்படி மூளைக்குள்
வெம்மை பரவியதில்லை!

ஆனால்..
அநாதை என்று தெரிந்த பின்
எனை துரோகித்து
வஞ்சித்தாயே!

நெருப்புக் கட்டைக்குள்
ஓடி புகுந்து..
தற்கொலை முயற்சியில்
என் இளமை!!!

பெரிய புள்ள !

எல்லாமே
முடிஞ்சி போயாச்சி
நானா!

கெணத்தடியில் தேப்ப குட்டியும்
புல்லு வெலக்கி
பெத்தாவும் பிடிச்சமே..
பேரக்கா வித்த காசில
கிரிடொபி சாப்பிட்டமே..

போற வார பஸ்ஸூக்கெல்லாம்
கெட்டம்பொல் அடிச்சி மாட்டியது..
அமரய்யா கடயில கெழங்கெடுத்து
அடுத்த தோட்டத்துல விறகொடித்து
கட வச்சி வெளயான்டது..

லொக்கெட் மரத்து உச்சியிலேறி
கன்டக்டர் ட்ரைவரா கற்பன பண்ணி
கீழ வுழுந்து காலுடஞ்சது..

வாகனம் கொளுத்தும் திட்டம்
உம்மாகிட்ட மாட்டினது..
அந்தி வரை 'போக்' ல ஒழிஞ்சி
இருட்டினதும் பயந்து செத்தது..

பள்ளிக்கு ஓதப்போயி
அஸருக்கு அஸரத் போனதும்
சொல்லாம கொள்ளாம ஓடி வந்தது..

உங்கட தமிழ் ஹோம்வேர்க் ஐ நானும்
ஏன்டதை நீங்களும் திருத்தமா செஞ்சி
வெரிகுட் எடுத்தது..

யாருமில்லா நேரம் பாத்து
மாவு சீனி களவாண்டி திண்டது..
அரிசி போட்டும் புறா சிக்காததால்;
அழுது பெரட்டியது..

சிரட்டை அடுக்கி.. விக்கட் வச்சி..
ஜுட் ராஜா சமிந்த எல்லோருமா
நடு ரோட்டில க்ரிக்கட் அடிச்சது..

ஹ்ம்ம்..
எல்லாமே முடிஞ்சி போயாச்சி
நானா!

கொழும்புல நீங்க வேலன்னு
பெருமயா பேசிக்கிறாங்க..
நான் தான் ஊட்டுக்குள்ளேயே
வெந்தழியிறேன்..

ஏன் என்டால்..
நான் தான்
வயசுக்கு வந்துட்டேனாமே!!!

பூஜ்யமாய் நான் !

நானில்லாத
உன் நாழிகைகள்
உனக்கு
சந்தோஷம் தரலாம்..
நீயில்லாத
என் நிமிடங்கள்
எனக்கு துன்பம் தரும்!

என் சுவாசக் காற்றின்
கலப்படமில்லாத
உன் மூச்சுக்காற்று
இனிமையாயிருக்கலாம்..
உன் அருகாமையற்ற
என் காலங்கள்
தேள் கொட்டும்!

வேறொருத்தியின் காவலனாய்
உனை எண்ணும் சக்தியின்றி
கழிந்து கொண்டிருக்கிறது
என் நிசப்த பொழுதுகள்!

அரங்கேறிக்கொண்டிருக்கம்
மௌன போராட்டத்துடன்
விடிந்தும் இருளாயிருக்கிறது
என் ஏகாந்த இரவுகள்!

தூக்கம் கலைந்த
என் விழிகளுக்கூடாக
உன் விம்பம் பார்த்தே
நிர்க்கதியாய் நிற்கிறேன்
வெறும் பூஜ்யமாய் நான்!!!

ஆடுகளத்தில் அநாதையாய் !

முதன்முதலாய் - என்னில்
பூத்த காதல் பூ
நீயும் நானும்
காதலிக்கு முன்னேயே
கருகிப்போனது!

உனக்காக
என் மனசில்
நான் வரைந்த ஓவிங்கள்
நிறம் தீட்டப்படாமலேயே
வெறுமையாக!

நீயும் நானுமிணைந்து
நடாத்திய காதல் பாடம்
வெற்றி தோல்வியின்றி
ஆடுகளத்தில் அநாதையாக!

உன் நாமம் கூறியே
நெஞ்சில் ஏற்றிய சந்தோஷங்கள்
தெவிட்டுதலோ தித்திப்போ
துளியுமின்றி
தொடர்ந்தபடி இன்னும்!

எப்போதுமே
என்
உயிரின் திணுசுகளையும்
சாமான்ய உணர்வுகளையும்
உன் ஞாபகங்கள்
ஆக்கிரமித்து வதைக்கும்!

நினைவுகளில் எல்லாம்
உதிக்கின்ற
உன் எண்ணங்கள்
பெருமூச்சாய்
உஷ்ணம் கிளப்பி
சுடும் என் உயிரை!

வற்றிப்போன
உன் மனசறிந்தும்
என் வாலிபமோ
உன்னில்
தொற்றியிருப்பது
பெரும் ஆச்சரியம்!

இருந்துமென்ன..
ஓர் தடாகமாய் மாறிவிட்ட
என் இதயத்துக்குள்
நீ மட்டுமே வந்து
நீச்சலடிக்க வேண்டுமென
கதறுகிறது
என் அணு ஒவ்வொன்றும்
எப்போதுமே
என்
உயிரின் திணுசுகளையும்
சாமான்ய உணர்வுகளையும்
உன் ஞாபகங்கள்
ஆக்கிரமித்து வதைக்கும்!

நினைவுகளில் எல்லாம்
உதிக்கின்ற
உன் எண்ணங்கள்
பெருமூச்சாய்
உஷ்ணம் கிளப்பி
சுடும் என் உயிரை!

வற்றிப்போன
உன் மனசறிந்தும்
என் வாலிபமோ
உன்னில்
தொற்றியிருப்பது
பெரும் ஆச்சரியம்!

இருந்துமென்ன..
ஓர் தடாகமாய் மாறிவிட்ட
என் இதயத்துக்குள்
நீ மட்டுமே வந்து
நீச்சலடிக்க வேண்டுமென

கதறுகிறது
என் அணு ஒவ்வொன்றும்!!!

காய்ந்துவிட்ட கண்ணீர் !

நான் அழுகிறேன்
இல்லையில்லை
அழ முயல்கிறேன்
எவ்வளவு தான்
பிரயத்தனப்பட்டாலும்
அடைமழையில் வரைந்த
ரங்கோலியாகத்தான் அது!

முன்பு
கண்ணீர் வெள்ளம்
வற்றும் போதெல்லாம்
இதய ஊரில்
ஒரு மயான அமைதி நிலவும்!

இப்போது
அது முடியாமல்
என்னுடன்
ஊமையாய் கரைகிறது
அந்த நிலவும்!

வயிற்று வழியே மேலெழும்
அக்கினிக் குழம்பு
தொண்டைக் குழியை நிரப்புகிறது!

சல்லடையான
என் இதயத்துக்குள்
கல்லறைக் காயங்கள்
தகிக்கிறது!

என் மனசின்
அந்தரங்கத்தின்
அவஸ்தையோடு
அந்தரப்பட்டு
கண்ணீரும்
காய்ந்து போகிறது!!!

உயிரை உடைத்துப்போடு !

இதயத்தணலில் மேலெழும்
சில நினைவுப் புகை
என்னில் படிந்துகொள்கிறது!

அதனால்
மனசோ அவிந்தழிந்து
நாற்றமெடுத்த
விரக்தியில் நான்!

வக்கிரம் வலம் வரும்
இவ் வஞ்சகர்கள்
உள்ளத்தில்
எதை சாதிக்கப்போவதான பிரமமையோ?

உயிர் கவசத்தை
உடைத்துப்போடுவதில்
இப்படியும் கூட
இன்பம் காண
முடிவது பற்றித்தான்
புதினமாயிருக்கிறது!

முடிவிலியாகிப்போன
துரோகங்களால்
மிதமிஞ்சிப் போகிற
துரோகத்தைத் தடுக்க
ஆண்டவா
உனக்கு கூட
அருள்தரப்போவது யார்???

உடன் பாடுகள் !

நான்
உன்னுடையவளாகப்போகும்
நாளை எண்ணியே
இதயம் பலமிழந்து விட்டது!

வருடங்கள் காத்திருக்க
தெரிந்த எனக்கு
நாழிகைகளை சமாளிப்பது தான்
காயங்கள் தோறும்
உப்பால் கழுவுவது போலிருக்கிறது!

அரிதாக முதலில்
நான் கண்ட
கற்பனைகள் யாவும்
பெரிதாக தன்னுலகுக்குள்
அழைத்துச் செல்கிறது!

சொல்வாக்கு தவறாத
உன் குணம் கண்டதாலோ என்னவோ
செல்வாக்கை குறைவின்றி
பெற்று விட்டாய் என்னிடத்தில்!

கற்கண்டை சாப்பிட்டாற் போல - காதல்
சொற்கொண்டு நீ பேசுகையில்
ஆனந்த அருவியின் அலை வந்து
மோதுகிறது என் உள்ளத்தில்!

முரண்பாடுகளின்
தடயங்கள் அழிந்து போன
அன்பொன்றில்
கட்டுப்பட்டிடத்தான்
என் உயிருக்குள்
உடன்பாடுகள் அதிகமாக!!!

நரகச்சாலை !

இதயம் எதிர்கொண்ட
தாக்கங்களை
இரு வரியில் கூறிட
முடியவில்லை!

எதையும் தாங்கும்
இதயம் கொள்ள
எல்லோருக்கும் முடிவதில்லை!

அராஜகமாய் அரங்கேறுகிறது
அதிகாரத்தின் அடிவாடித்தனம்!

அநியாயமாக செத்துப் பிழைப்பது
அன்பு தேடும்
உள்ளங்கள் தான்!

அப்பாவிகளின்
உள்ளத்தின் வலிகளை
அப் பாவிகள் உணர்வதற்கு
ஏன் தான் சாத்தியமாவதேயில்லை?

தன் ஆளுமையை காட்டிடத்தான்
மனிதத்தோல் போர்த்திய
மிருகங்களை உற்பவித்தானா
அந்த இறைவன்?

மலட்டு மனம் கொண்டவர்களின்
பொறாமைத் தீயில்
எரிந்துவெந்து சாம்பலாகுவது
தத்தம் மரக்கட்டை
உடல்கள் தான் என்பதை
உணரும் காலம் வெகுதூரமில்லை!

உள்ளத்தில் விஷம் வைத்து
உதட்டில் தேன் தெளிக்கும்
கலையை கற்ற நரகசாலை எதுவோ?

நேசங்கள் !

இரத்தக்களறி ஆகிவிட்ட
என் வாழ்வை..
கண்ணீர் கொண்டு
கழுவியும் பயனில்லை!

சொந்தம் என்று சொல்லியே
சோகங்களை சொந்தமாய்
தந்துவிட்டுப் போனவர்களை
எத் திணையில்
நான் அழைக்க?

ஆழ் மனதில் உருவாகிய
காதல் கூட
காற்றில் எறியப்பட்ட
காகிதமாய்
பறந்து போனது!

உறவுகளின் உதறல்களால்
உடைந்த உள்ளத்தை
சீராக்க பட்டபாடெல்லாம்
மழை நீரில் விட்ட
கப்பல் தான்!

குதறி விடப்பட்டுள்ள
என் மனசின்
காயங்கள் தான்
காய்ந்து கிடக்கின்றன!

எத்தனை ஆறுதல் கொண்டும்
தேற்ற முடியாதபடி
மாரிகால வானம் போல
மரித்து தான் போயிற்று
என்னில்
ஊற்றெடுத்த நேசங்களும்
எனக்கான பாசங்களும்!!!