என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Friday, August 10, 2012

தெருப் பிச்சைக்காரி


யாரது...?

எதை எதிர்பார்த்தவளாய்
வீதியோரமாய்க் கிடக்கிறாள்?

அவள்
பெற்றோரின் அன்புக்காய்
ஏங்கியவளா?
சகோதரப் பிணைப்பைக்
காணாதவளா?

காதல் கொண்டு
ஏமாற்றம் அடைந்தவளா?
நட்பெனும் வேஷ வலையில்
சிக்கி சீரழிந்தவளா?

ரோசம் கெட்டு
பாசம் தேடுபவளா?
இரக்கத்துக்காக - கண்
உறக்கம் மறந்தவளா?

நேசத்துக்காக - நெஞ்சில்
நெருப்பள்ளிப் போட்டவளா?
அன்பு பொய் என்பதை
அனுபவித்தும் அறியாதவளா?

வாழவும் சாகவும்
கொடுப்பனமில்லாதவளா?
செத்தாலும் தனியாய் அழுகும்
அநாதைப் பிணம் அவளா?

யாரது...?

எதை எதிர்பார்த்தவளாய்
வீதியோரமாய்க் கிடக்கிறாள்?

காலாவதியாகாத நினைவுகள்


காலவோட்டத்தின்
காய் நகர்த்தலில்
நீயும் நானும் பிரிந்தாலும்
உன் எண்ணம்
என் ஞாபக ஊஞ்சலில் ஆடும்!

கற்பனைகள் வளர்த்து
கவிதைகள் வரைந்து
கவலைகள் மறந்து
நாமிருவரும்
சுதந்திரமாய் திரிந்த காலங்கள்
மனசுக்குள்
காலாவதியாகாமலேயே!

தோள் கொடுப்பான் தோழன்
என்பதற்கிணங்க
என் அத்தனை
உணர்வுகளையும்
உள்ளக் கிடக்கையாக்கி
கண்கள் உனக்காக
கண்ணீர் சொரிகின்றன!

அந்தி மழையில்
ஆனந்தித்த சுகம்..
வெட்ட வெயிலில்
குளிர் நீருக்கலைந்த தவிப்பு..
நுளம்புத் தொல்லையால்
தொலைத்திருந்த
நமதான தூக்கங்கள்..

உப்பு அதிகரித்த
உணவுக்குள் உடனே
நீர்விட்டு அருந்திய பாசம்...

எல்லாமே
என் ஆழ் மனதில்
சதா காலமும்
சஞ்சரித்தபடியே இருக்கும்!

உனக்கான
வாழ்தலின் இருப்பை
உன் தோழன் என்ற முறையில்
உடனே பார்த்துவிட துடிக்கிறேன்!

ஆனால்

அதற்குள்
என் மரணம்
நிகழாதிருக்க வேண்டும்!!!

ரமழானே நீ மீண்டும் வந்திடு


ரமழானே நீ மீண்டும்
வந்திட வேண்டும்..
நல்மாற்றத்தை உள்ளத்தில்
தந்திட வேண்டும்!

தரணியிலே சிறப்பாக
வாழ்ந்திட வேண்டும்..
அல்லாஹ்வின் அருளெம்மை
சூழ்ந்திட வேண்டும்!

காமங்கள் பசி தாகம்
மறைந்திட வேண்டும்..
குற்றங்கள் எமைவிட்டு
கரைந்திட வேண்டும்!

பர்ளான தொழுகைகளை
தொழுதிட வேண்டும்..
கப்ருடைய நிலை எண்ணி
அழுதிட வேண்டும்!

இறை ஆணை எப்போதும்
ஏற்றிட வேண்டும்..
பெற்றோரின் சொல் தினமும்
கேட்டிட வேண்டும்!

அடக்கமாக அனைவரிடமும்
பேசிட வேண்டும்..
அன்புதனை இதயத்தில்
பூசிட வேண்டும்!

பொறுமையை வாழ்க்கையில்
காத்திட வேண்டும்..
நன்மைகளை மறுமைக்காய்
சேர்த்திட வேண்டும்!

தீனுக்காய் எதனையும்
நாம் இழக்க வேண்டும்..
அதில் திளைப்பதற்கு
உள்ளத்தைப் பழக்க வேண்டும்!!!

தற்காலப் பெண்ணியம்


பெண்ணியம் என்றால் என்ன
கண்ணியம் மீறி இருப்பதா?

குட்டைப் பாவாடை அணிந்து
குலுங்கிக் குலுங்கி நடப்பதா?
சட்டை பொத்தான் விலகியிருக்க
அசட்டையாகத் திரிவதா?

பொழுதுபட்ட பின்னாலும்
சாலைகளில் உலா வருவதா?
இருட்டில் தனியாய்ப் போனாலும்
இன்னல் வரக்கூடாது என்பதா?

பட்டு உடல் வெளித் தெரிய
பவனி நிதம் வருவதா? - ஆண்கள்
தொட்டுவிட நினைத்தாலும்
விட்டுவிட வேண்டும் என்பதா?

மார்க்கம் தனை மறந்து
மந்திகள் போல் வாழ்வதா?
வர்க்க பேதம் காட்டிக்கொண்டு
பெருமையுடன் திரிவதா?

விழுமியங்கள் விலக்கி வைத்து
விளம்பரத்தில் நடிப்பதா?
கவர்ச்சி காட்டி செல்வதொன்றே
உயர்ச்சி என்று நினைப்பதா?

கணவனுடைய தேவைகளை
கவனிக்காமல் இருப்பதா?
பிள்ளைகளைக் கவனிக்காமல்
பிரபல்யத்தைத் தேடுவதா?

மகளிர் சங்க கூட்டமென்று
மாதம் முழுவதும் கழிப்பதா?
வயதில் மூத்த அனைவரையும்
வார்த்தைகளால் துளைப்பதா???

கற்றவராய் மாறுங்கள்


கழிகின்ற காலங்கள்
களியாட்டம் கண்டவை..
விடிகின்ற பொழுதுகள்
விபரீதம் கொண்டவை!

கற்கும் பருவத்தில்
காதலை சிந்திக்காதீர்..
களவாக உறவாட
கயவரைச் சந்திக்காதீர்!

நாகரீகத்தில் மூழ்கி
நரக வழி தேடாதீர்..
சமூகத் துரோகிகளாய்
சமாதியாகிப் போகாதீர்!

தலைகளிலே தவறான
சிந்தனைகள் சுமக்காதீர்..
அறிவின்றி அவனியிலே
அலைந்து நீர் திரியாதீர்!

பொன்னான நேரத்தை
வீணாகக் கழிக்காதீர்..
அல்லாஹ்வின் படைப்பினிலே
எவரையும் பழிக்காதீர்!

கண்ணியத்தைப் பேணி
கனவான்களாகப் பாருங்கள்..
கனவு தேசம் கடந்து
கற்றவராய் மாறுங்கள்!!!

நோன்பு


நோன்பென்று மாண்பாக
இதயம் சொல்லும்..
நிறைவேற்றினால்
மனித இனம்
ரையான் செல்லும்!

அல்லாஹ்வின்
அருட்கொடையை
பெற்று வெல்லும்..
அந்த இன்பத்தின்
உச்சியிலே
நாளும் வெல்லும்!

நோய்களைக்
கவலைகளை
அப்பால் தள்ளும்..
ஏழைகள் வயிற்றுப் பசி
உணர்ந்து கொள்ளும்!

தானங்கள் தர்மங்கள்
செய்யச் சொல்லும்..
அந்த தர்மத்தால்
இதயத்தில்
இன்பம் பொங்கும்!

பொறுமையாய்
வாழ்வதனைக்
கற்றுக் கொள்ளும்..
தீய எண்ணங்கள்
யாவையும்
விட்டுத் தள்ளும்!!!