என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Wednesday, November 23, 2016

எனக்கு உங்களைப் பிடிக்காது


வகுப்பில் எத்தனையாம் பிள்ளை என்று கேட்டு

என்னைக் குடைந்தெடுத்து வருத்தியதால்

விடை சொல்லாததுகண்டு என் பெற்றோர் என்னை அடித்ததால்

எனக்கு உங்களைப் பிடிக்காது


விசேச வைபவங்களின் போதெல்லாம் அம்மா காணாதபடி

நீ எதற்காக இங்கு வந்தாயென்று காதுக்குள் கேட்பதால்

தலைகுனிந்தபடி நான் அங்கிருந்து அகலுவதால்

எனக்கு உங்களைப் பிடிக்காது


தம்பி பிறந்த நாளொன்றில் வந்து என்னை பார்த்து

இவனைவிட சின்னவன் அழகென சொல்லியதால்

அதனால் எல்லோரும் என்னைப் பார்த்து சிரித்ததால்

எனக்கு உங்களைப் பிடிக்காது


சந்தர்ப்ப சூழ்நிலையில் உங்கள் இல்லம் தங்கியநாளில்

நானிருக்க உங்கள் பிள்ளைக்கு மாத்திரம் பரிமாறியதால்

எனக்கு எச்சிலூற அதைக்கண்டு என்னை விரட்டியதால்

எனக்கு உங்களைப் பிடிக்காது


புத்தாடை அணிந்துநான் பவனி வந்த பொழுதெல்லாம்

சீ நல்லாவேயில்லை என அப்பாவுக்கு கேட்காமல் கூறியதால்

நான் தவிப்பது கண்டு உங்கள் முகம் மலர்ந்ததால்

எனக்கு உங்களைப் பிடிக்காது


இதையெல்லாம் என் மனதில் வைராக்கியமாய் சுமந்து

படிப்பில்; கவனம் செலுத்தி நான் முன்னேறிவிட்டதால்

இந்த ஊர் போற்றும் மனிதனாக நானும் மாறிவிட்டதால்

உங்களுக்கு என்னைப் பிடிக்காது!!!


Wednesday, November 9, 2016

வாசல் வந்த நதி

நதியே
நீ என் வாசல் தேடி வந்திருந்த போது
நான் புறப்பட்டுப் போயிருந்தேன்
திரும்பி வந்துப் பார்க்கையில்
நீ வந்து போன தடங்கள் மாத்திரமே
மிஞ்சிக் கிடந்தன..

வண்டுகளுடன் போராடும்
பூக்களின் வேதனை
யாருக்கும் தெரிவதில்லையாதலால்
பூக்களுக்கு ஆறுதல் சொல்லப்
போயிருந்தேன்..
அப்போது பார்த்து
நீ வந்துச் சென்றிருந்தாய்

எனது அருகாமையில் வசித்துவிட
நீ எண்ணியிருந்ததாய்
அன்றிரவு நிலவெனக்குச் சொன்னது!
நட்சத்திரங்கள்
அழுது வடித்தன..
அடுத்தநாள் சூரியன் கூட
கோபப்பட்டு சுட்டெரித்தது!

நதியே
என்னிடம் உன் காதலை
இல்லை இல்லை
உன்னிடம் என் காதலைச்
சொல்லுமுன்பே நீ
வற்றி விட்டாயா?
உனக்குத் தெரியுமா
நான் உன்னை
எவ்வளவு காதலித்தேன் என்று?

நீ உன் பாட்டுக்கு
(ஓ)பாடிக் கொண்டிருந்த போதெல்லாம்
அதை இசையாய்
வீணை மீட்டியிருக்கின்றேன்...
தென்றலெனும் என் தோழிகளுக்கு
உன்னைக் காட்டிக் காட்டி
சந்தோசப்பட்டிருக்கின்றேன்..

எதிர்பாராத சமயம்
உன் மேனி தொட்டு நான் போகும்போது
நாணப்பட்டு முகம் சிவந்திருக்கிறேன்..
உன் தோளில் சாய்ந்துகொள்ள வரும்
அழகிய மீன் குஞ்சுகளுக்கெல்லாம்
பொய் சொல்லி அனுப்பிவிட்டு
உன்னை மட்டும் ரசித்திருக்கிறேன்..
என்னைப் பார்த்து கண் சிமிட்டும்
மின்மினிப் பூச்சிகளை எல்லாம்
கண்டித்து அனுப்பியிருக்கிறேன்..

மன்னிக்க மாட்டாயா?
இலைகள் கொண்டு
தூதுவிடுகின்றேன்
என்னை ஏற்றுக்கொள்..
என் அன்பில்; நனைந்து
நீ சிலிர்த்துக்கொள்..

வா
வந்தென் காதல் ஏற்றுக்கொள்..
இப்படிக்கு
உன் காற்று!!!

புழுதியான புனிதங்கள்

உலகத்தின் போக்கெல்லாம் உருமாறி உருமாறி
கீழ்த்தரமாய் போகின்ற போது - மக்கள்
மிருகங்கள் போல் மாறி மனிதத்தை துறக்கின்ற
நிலை மாறும் நாள் எப்போது?

புனிதங்கள் எல்லாமே புழுதியாய் ஆகிவிடும்
நாளின்று தூரத்தில் இல்லை - இதனை
உணராமல் வழிமாறி தடம்மாறி போவோரை
அறிந்திங்கு உடைத்திடனும் பல்லை

கலிகாலம் உருவாகி கன்னியரும் கருவாகி
அழிகின்ற நிலை என்று மாறும் - இதை
சரி காணும் சட்டங்கள் சில நாட்டில் பார்க்கையிலே
உச்சந்தலை கோபம் தான் ஏறும்

வெளிநாட்டு மோகங்களும் பணத்தாசை பூதங்களும்
தலைக்கேறி தாய் போவாள் சவூதி - இனி
தான் பெற்ற மகளையே தன் மனைவி ஆக்கவிடும்
தந்தையால் மகள் வாழ்க்கை சகதி

புகழ்ச்சிக்கும் பெருமைக்கும் காசுக்கும் மட்டுமே
பேராசைப் படுகின்ற கூட்டம்  - சில
நாள் கழிந்து பார்க்கையிலே தம்மிடமே எதுவுமில்லை
என்றுணர்ந்து கண்ணீரைக் காட்டும்

வஞ்சகத்தை கொண்டு நிதம் வாஞ்சையாகப் பழகுபர்
ஒருபோதும் நல்லவரே ஆகார் - தூய
நட்புக்கு விலை பேசி நரிக் குணத்தை காட்டுமவர்
நடு வீதியில் அடிபட்டே சாவார்!!!

Tuesday, November 8, 2016

ஏகாந்த இரவு

மனசெல்லாம் வழிந்தோடும் குருதியினால்
ஈரமாகிப் போனதென் ஏகாந்த இரவு
இந்த இரகசியத்தை அறிந்த சாட்சி நிலவு

துயர் வாடை வீசுகின்ற காற்றிடம் இடம்மாறி
வழிகேட்டு அலையுதென் மனசு
இது மனசு இல்ல வெறுமையான தரிசு

வண்ணங்கள் நிறம் மங்கி கருமையாய் ஆனதுபோல்
துருப்பிடித்துப் போனதென் கனவு
என் கனவிலும் இழந்தவற்றின் நினைவு

தீபங்கள் ஏற்றியதாய் கனவுகளில் சிறைகிடந்து
தீப்பிடித்துக் கொண்டதென் வாழ்வு
நான் வாழ்வதிலும் நன்றுதான் சாவு

சிறகிழந்த பறவையொன்று வலியாலே கதறுவதாய்
காதலெனும் வழி மலர்ந்த உறவு
உறவு இன்று உப்பு இல்லா உணவுTuesday, November 1, 2016

கடன் கொடுத்துப் பார்

கடன்_கொடுத்துப்_பார்
.............................................
கடன் கொடுத்துப் பார்
உன்னைச் சுற்றி ஏமாற்றம் தோன்றும்
துரோகம் அர்த்தப்படும்
காலத்தின் நீளம் விளங்கும்
உனக்கும் கண்ணீர் வரும்
தலையெழுத்து மாறிப்போகும்
நண்பன் எதிரியாவான்
கடனைத் திருப்பிக்கேட்டே
உன் வாய் வலிக்கும்
கண்ணிரண்டும் இருட்டிப் போகும்
கடன் கொடுத்துப் பார்

தலையணை நனைப்பாய்

மூன்று முறை கோல் பண்ணுவாய்
ஆன்ஸர் பண்ணினால்
வருஷங்கள் நிமிஷம் என்பாய்
ஆன்ஸர் பண்ணாவிட்டால்
நிமிஷங்கள் வருஷம் என்பாய்
கடன் கேட்டவனே கவனிக்க மாட்டான்
ஆனால் அவனை நீ கவனிக்க வேணுமென உணர்வாய்
மூளைக்கும் மனசுக்கும் உருவமில்லா வலி உருண்டை உருளக் காண்பாய்
இந்த பாசம்இ நேசம்இ அன்புஇ நம்பிக்கை இந்த நட்பு எல்லாம்
பணத்தை வாங்கும் வரைக்கான ஏற்பாடுகள் என்பாய்
கடன் கொடுத்துப் பார்

இருதயம் அடிக்கடி வலியால் துடிக்கும்

நிசப்த அலைவரிசையில் கடன் வாங்கியவனின் குரல் ஒலிபரப்பாகும்
உன் பணமே எமனாகி
உன்னை வாட்டும்
கடனின் திரைச் சீலையை
பணம் கிழிக்கும்
எதிர்பார்ப்புகள்
நைல் நதியாய் பெருக்கெடுக்கும்
உதடுகள் காய்ந்து சகாராவாகும்
கடன் சமுத்திரமாகும்
பிறகு கண்ணீர் துளிக்குள்
சமுத்திரம் மிதக்கும்
கடன் கொடுத்துப் பார்

சுவற்றில் மோதி மோதி உடைந்து போக உன்னால் முடியுமா

நம்பியதால் துரோகத்தை அடைந்ததுண்டா
கெஞ்சுகின்ற வலி அறிந்ததுண்டா
கவலையை உனக்குள் புதைக்கத் தெரியுமா
சபையில் அழுகையை கட்டுப்படுத்தவும்
தனிமையில் சத்தமிட்டு அழவும்
உன்னால் முடியுமா

பைத்தியம் ஆக வேண்டுமா

ஐந்து அங்குல இடைவெளியில் அவனிருந்தாலும்
உன்னை காணாததுபோல் இருந்ததுண்டா
கடன் கொடுத்துப் பார்

சின்னச் சின்ன துரோகங்களை பழக வேண்டுமே அதற்காகவேனும்

கோபத்தைக் கட்டுப்படுத்தி பணிந்துபோக வேண்டுமே அதற்காகவேனும்
நம்பிக்கை என்ற சொல்லுக்கும் துரோகம் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத அர்த்தங்கள் விளங்குமே அதற்காகவேனும்
வாழ்ந்து கொண்டே சாகவும் முடியுமே
செத்துக்கொண்டே வாழவும் முடியுமே அதற்காகவேனும்
கடன் கொடுத்துப் பார்

சுயமரியாதை சட்டை பிடித்தாலும்

கௌரவம் உயிர் பிழிந்தாலும்
விழித்துப் பார்க்கையில் கடன்காரன் ஊரைவிட்டு சென்றிருந்தாலும்
ஒரே சந்தியில் இருவரும் சந்தித்துக்கொண்டாலும்
நீ தேடும் அவனோ உன்னைக் கண்டுக்காமல்விட்டாலும்
கடன் கொடுத்துப் பார்

கண்ணீர் விரக்தி இரண்டில் ஒன்று

இங்கே நிச்சயம்
கடன் கொடுத்துப் பார்

மூலம் - கவிப்பேரரசு வைரமுத்து


Wednesday, October 29, 2014

நானும் எனது கவிதைகளும்

என் இதயமெனும் சிறு கடலில்
உன் நினைவெனும் பெருங்கப்பல்
நங்கூரமிட்டபடி!

புராதனங்களில் இருந்து
கண்டெடுத்த கல்வெட்டாய்
என் காதல் இப்போது!

மிகவும் காரிருள் படிந்த
பொழுதொன்றில் தோன்றிய
சிறு நிலவுக் கீற்றைப் போல்
இன்று உன்
தொலைபேசி அழைப்புக்களின் நாதம்!

தூறலும் இருட்டுமாய் இருக்கும்
அந்தி நேர உருவமாய்
நீயும் நானும்
கடைசியாய் சந்தித்துக்கொண்ட
நிமிடங்களின் நினைவுகள்!

புல்வெளிகள் ஏந்திக்கொண்ட
சிறிய பனித்துளிகள் போல்
உன் ஓரப் பார்வையை
நெஞ்சில் சுமந்தபடி
நானும் எனது கவிதைகளும்!

Monday, October 27, 2014

எல்லாமாக நீ!

ஆர்ப்பாட்டமில்லாத - ஒரு
அழகிய காதலை
எனக்குள் விதைத்தவன் நீ!

காதலானது ஆறு குளம் நதி
என்று வியாபித்திருக்கும் இன்றுகளில்
ஒரு ஆழமான சமுத்திரமாக
எனக்குள் இருப்பவன் நீ!

சோகமாக சோம்பிக் கிடக்கும்
பூந்தோட்ட புஷ்பங்களுக்கெல்லாம்
தென்றலுடன் சிரித்து
தலையாட்டச்
சொல்லிக் கொடுத்தவன் நீ!

ஊடல் கொண்டிருக்கும்
நட்சத்திரங்களுக்கிடையில்
அன்பைப் புரிய வைத்து
அழகான ரோஜாவைப் பரிசளித்தவன் நீ!

நீர்வீழ்ச்சியின் சலசலப்பை
எல்லாம் மொழிபெயர்த்து
சங்கீதமாக்கிப்
பாடியவன் நீ!

கொட்டிவிடும் மழைத்துளிகளை
கையில் ஏந்திவந்து
அவற்றுடன் ரகசியமாய்
பேசிக் கொண்டிருந்தவன் நீ!

மீசை வைத்த புயலாக
என் முன்னே தோன்றி
என் இதயத்தை
வாரிச் சுருட்டி
எடுத்துச் சென்றவன் நீ!

என்னையும் என் அன்பையும்
முழுசாக புரிந்துகொண்டு
எனக்குள்ளே எல்லாமாக
என்றும் இருப்பவன் நீ!