என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Thursday, June 28, 2012

துஆ கேட்டிடுங்கள் இன்றே

பாவக்கறை போக்கிடவும்
குறையெல்லாம் நீக்கிடவும்
பாசங்கள் மலர்ந்திடவும்
சாபங்கள் மறைந்திடவும்

நல்மாற்றங்கள் விளைந்திடவும்
நயவஞ்சகம் தொலைந்திடவும்
நானிலம் சிறந்திடவும்
நாசகாரம் துறந்திடவும்

வல்லவன் ரஹ்மத்
கிடத்திடவும்
ஷைத்தானின் வில்லங்கம்
உடைத்திடவும்
இனவெறிகள் கலைந்திடவும்
மனமுறிவுகள் குலைந்திடவும்

கன்னிகள் கரை சேர்ந்திடவும்
காளையர் முன்னேறிடவும்
சீதனம் கேட்கும்
தீ குணம் ஒழிந்திடவும்
மின்னலாய் தாக்கும்
இன்னல் யாவும் அழிந்திடவும்
வல்லவன் அல்லாஹ்வை ஏற்றிடவும்
தீன் வழியில் வாழ்ந்து காட்டிடவும்

கற்புள்ள மாந்தர்
கட்டுப்பாடாய் வாழவும்
நட்புகொண்ட இதயங்கள்
விட்டுக்கொடுத்து பழகவும்

கலகத்தில் தவிக்கும்
உலகமது அமைதியாவும்
இலங்கையில் வசிக்கும்
இளம் கைகள் உறுதியாகவும்

நடுநிசியில் தொழுதிடவும்
நரகம் எண்ணி அழுதிடவும்
இல்வாழ்வில் இன்பம் சேர்த்திடவும்
இஸ்லாத்தின் வழி கை கோர்த்திடவும்

துஆ கேட்டிடுங்கள் இன்றே
நிறைவேற்றிடுங்கள் நன்றே!!!

நேசத்தின் ஒலிகள்

அண்ணா எப்படியிருக்கிறாய்?
மகனே சுகமாயிருக்கிறாயா?

வீட்டாரின்
கடித வரிகள்..
வரிகளல்ல - இது
பாசத்தின் ஒலிகள்!

பருவம் தொட்ட
நாள் தொடக்கம்
வேலையெல்லாம்
வெளிநாட்டில்..

வெளி ஆளாய் மாறாமல்
அவன் நினைப்பெல்லாம்
தன் வீட்டில்!

தவணை முறையில்
அவனுக்கு விடுமுறை..
வீடு வந்தால்
சுகமாய் விடியும்
அவனது வைகறை!

அண்ணா.. மகனே
என்று பாசம் சொட்டும்..
அந்த அன்பின் உருக்கத்தில்
கண்ணீர் முட்டும்!

அவன் கைதொடும்
தூரத்தில் நிலவு எட்டும்..
சொர்க்க வீடு பாசத்தால்
களை கட்டும்!

உழைத்து
ஓடான தந்தை - அதை
நினைத்து நோயான
அன்னை - தன்
திருமணத்துக்காய்
காத்திருக்கும் தங்கை!

அன்னையை தந்தையை
வாழ வைக்க வேண்டும்..
தன்னைப் பெற்ற வேர்களின்
தாகம் தீர்க்க வேண்டும்!

கனிமொழி தங்கையை
கரைசேர்க்க வேண்டும்..
கரை சேர்க்க வேண்டுமெனில்
காசுழைக்க வேண்டும்!!!

நினைவுகளின் நெரிசல்

மனிதம் மரித்த உலகினிலே
மனித நேயம் பார்க்கிறாய்..
கள்ளிப் பாலைத் தந்துவிட்டு
குடிக்குமாறு கேட்கிறாய்!

நீதி உலகில் அழிந்த பின்பு
நீதி பற்றி பேசுகிறாய்..
ஆதி மனிதன் ஆடையின்றி
இருந்தது போல் கூசுகிறாய்!

இறைவன் அருளைத் தரும்போது
அதைத் தடுப்பது பற்றி நினைக்கிறாய்..
அழுகிற மனிதர் துன்பத்தில் நீ
புதுமையாய் இன்பம் காணுகிறாய்!

கொட்டும் மழையிலும்
கொளுத்தும் வெயிலிலும்
உழவனை நிதமும் காணுகிறாய்..
உழைப்பவன் அவனின் கூலியைக் கேட்டால்
களைப்பாய் இருப்பதாய்க் கூறுகிறாய்!

சீதனம் வேண்டாம் என்பவனை நீ
மருமகனாக ஏற்கின்றாய்..
உன் மகனிருந்தால் இன்னொரு பெண்ணின்
காசைப் பிடுங்கப் பார்க்கின்றாய்!

அன்னையின்றேல் அவனியிலே நாம்
பிறப்பது எப்படி என்கின்றாய்..
பெண்ணைப் பார்த்து தீயன உரைத்து
பெண்ணைக் கேவலமாக்குகிறாய்!

உனக்கென உயிர்தர இருப்பவன் அவனின்
உயிரைக் கொல்லப் பார்க்கிறாய்..
நட்பின் இலக்கணம் நாம் தான் என்று
நடிப்புக்கிடையில் கூறுகிறாய்!

இரவு நேரப் பெண்கள் பலருடன்
உல்லாசம் காணப் போகிறாய்..
விடிந்ததும் நீதான் உத்தமன் என்று
கோயில் குளம் போய் காட்டுகிறாய்!

அகம் முழுவதும் அழுக்கு கொண்டு
எல்லோரிடமும் பழகுகிறாய்..
உண்மையாக வாழ்பவர் எவரோ
அவரை விட்டு விலகுகிறாய்!!!

முதியோர் இல்லம்

பிஞ்சுக் கால்கள்
நெஞ்சில் உதைக்க
சிரித்த அந்த
தந்தை முகம்..
இன்று
முதுமையில் சோகமாய்!

பத்து மாதங்கள் சுமந்து
போற்றி வளர்த்த அந்தத்
தாயின் குரல்
இன்று
இயலாமையில் தீனமாய்!

இத்தனைக்கும்
தவமிருந்து பெற்ற
தவப்புதல்வனோ
படித்து பட்டம் பெற்று
பெற்றோரை விரட்டினான்
வீட்டை விட்டு!

மனைவிக்கு அடிபணிந்து
காசுக்குள் மனம் குளித்து
ஏழைப் பெற்றாரை
அவமதித்தது
பிள்ளை மனம்!

ஆனால்
பிள்ளையின் நல்வாழ்வுக்காகவே
ஓயாமல் பிரார்த்திக்கும்
பெற்ற மனம்!

அமுதப்பால் கொடுத்து
அன்பு கொடுத்து
ஆடை கொடுத்து
அறிவு கொடுத்து
இன்றென்ன பயன்
பெற்றோர்க்கு?

முதியோர் இல்லங்கள் பல
முளைத்துவிட்டன
கருணை உள்ளங்களைக்
காணோம் என்பதால்!!!

இரவில் அழுதல்

ஏ பெண்ணே!
திசை தெரியாத காட்டுக்குள்
பூப் பறிக்கப் போகாதீர்கள்..
கரை காணா சமுத்திரத்தில்
நீச்சலடிக்கப் புறப்படாதீPர்கள்!

இந்த அற்பர்களின்
இச்சைக்கு உங்களை
இரையாக்கி விடாதீர்கள்!

உங்கள் வீடுகளில்
வெளிச்சம் சேர்க்க - ஏன்
பிற குடும்பங்களைப்
பற்ற வைக்கிறீர்கள்?

சந்தர்ப்பம் அமையாமல் - சில
சந்திரர்கள் யோக்கியனாய்
சஞ்சரிக்கிறார்கள் - அவர்களுக்கு
சந்தர்ப்பமளித்து
சஞ்சலப்படுத்தாதீர்கள்!

வயிற்றுப் பிழைப்புக்கு
வழியுண்டு ஏராளமாக..
வயிற்றெரிச்சல் பெற்று ஏன்
வாழ்க்கின்றீர் ஏளனமாக?

பெற்றோரும் மற்றோரும்
உறவுகளும் பிள்ளைகளும்
அறிந்தால் தாங்குவாரா
உம்மைப் பற்றி?

அற்ப ஆசைக்கு
அலைபவர்கள் பகலில்
இராமர்களாக வாழ்கிறார்கள்..
அவர்களிடமா
ஆடை வாங்கிக் கேட்கிறீர்கள்?;

வேண்டாம்..

கௌரவமாக வாழ்வதாய்
ஊருக்கு காட்டிக்கொண்டு
பகலில் சந்தோஷிப்பதற்காய்
இரவில் அழ வேண்டாம்!!!

எதிர்காலம்

நிர்ச்சலமான என் மனதில்
வாழ்வு பற்றிய எண்ணங்கள்
கருகியபடி!

முன்னேற்றங்கள் குறித்த
என் நம்பிக்கைப் புள்ளிகளை
அழிக்கின்றன
காலத்தின் கொடூர கைகள்!

வறுமைக்கோட்டின் கீழ்
வழுக்கி விழுந்த எம் நிலையை
உயர்த்திப் பார்க்க
உறுதியில்லை!

தோள் சுமக்கும்
துயர்களை விட
மேலதிக பொருளாதாரச் சுமை
முடக்கிப் போட்டதெம்மை!

கடந்த காலம்
முடிந்துவிட்டது..
நிகழ்காலம் கழிகிறது..
எதிர்காலம்???