என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Tuesday, March 8, 2011

உம்மாவுக்கு!

உம்மா!
பிடிக்கவில்லை...
ஊரில் நீங்களும்
தூரத்தில் நானுமாய்
இருக்கும் இந்தக்காலங்கள்!

கிணற்று நீர்குளித்து
மொட்டை மாடியில்
குளிர்காயும் சுகம் இங்கில்லை!

அன்று...
வாப்பாவும் நீங்களும்
என் நுனி விரல் பிடித்து
மொண்டசூரிக்கு
அழைத்துப்போன போது...
பாடசாலையின்
முதல்நாள் குழந்தையின்
அழுகை தோன்றவில்லை எனக்கு!

ஆனால் இப்போதுகளில்
'அத்துல அய்யாவின்'
'ஸ்கூல் சர்வீஸ்'
வேனுக்குள் அடைத்து
தனியாக பாடசாலைக்கனுப்பிய
நாட்கள் போல வெறுத்துப்போய்
எல்லாம் கிடக்கு!

தூரப்பாடசாலை போவதால்
அனைவரையும்
விட்டுப்பிரிய மனமின்றி
பரீட்சையில் வேண்டுமென்றே
பதில் எழுதாத
சின்னக்குழந்தை நான் அன்று..

நினைத்திருப்பேனா
இப்படியொரு
நிலைமை வந்து
புத்திசாலித்தனமாய்
தூரவாக்கும் என்று?

என் முன்னேற்றங்களுக்காக
உங்கள் எல்லோரையும்
பிரிந்திருந்தாலும்
தங்கையுடனும்
தம்பியுடனும்
பிடித்த சண்டைகள்
என் நெஞ்சுக்குள்
இன்னும் பசுமையாகவே!

சாச்சி வீடு..
அஹதிய்யா...
டியூஷன்...
என்றிருந்த எனக்கு...
இன்றைய
வாழ்க்கையை நினைத்தால்
அழுகை வருது உம்மா!

என்ன செய்ய?
என் வாழ்க்கையின்
வெற்றிப் படிகளை எட்டி
நானொரு நாள்
முன்னேறி வருவேன்...
அதுவரை
கொஞ்சம் பொறுத்திருங்கள்
உம்மா..
வாப்பாவுக்கும் சொல்லுங்கள்!!!