என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Wednesday, December 14, 2011

அதிகாரத்தின் அடக்குமுறை

அதிகார வர்க்கத்தின்
அடக்கு முறையில்
அடிக்கடி
என் உரிமை நசுக்கப்படுகிறது!

தவறு செய்தது நீ..
செய்திடாத குற்றத்துக்காய்
குட்டுப்படுகையில்
ரத்தக்கொதிப்பு அதிகமாகிறது!

தன்மானம் பற்றி
அடிக்கடி அங்கலாய்க்கும் நான்
அவமானம் என்றால்
எப்படி பொறுப்பேன்?

உன் மீதுள்ள
கொலை வெறியை
அடக்குவதற்குத்தான்
அடிக்கடி கண்ணீரை
துணைக்கழைக்கிறேன்!


குற்றம் புரிந்த உன் மனது
குறுகுறுக்கிறதோ இல்லையோ
பாவம்பட்ட என் மனது
வேதனையால் புறுபுறுக்கிறது!

உன் பிழைகளை
நீயே அழிக்கவும்
அதில் ஏமாந்து
ஷஅவன்| விளிக்கவும்
என்ன காரணம்?

ஓ..
உன் சல்லாபத்தால்
எத்தனைப்பேரை
சறுக்க வைத்தாய் நீ!

புரிந்து விட்டதெனக்கு!

உன்னைப் போல்
மேலாடை விலக்கி
மேலதிகாரியுடன்
களவாய் திரிய
எனக்கும் முடிந்திருந்தால்...

சில நேரம்
என் பிழைகளும்
திரைக்குப் பின்
மறைக்கப்பட்டிருக்கலாம்..

எனக்கு கீழிருக்கும்
இன்னொருத்தியின்
உரிமை
மறுக்கபட்டிருக்கலாம்!

Sunday, December 11, 2011

நெருப்பு வாழ்க்கை

காலங்கள் கடந்தென்ன
நாமிங்கு கிடந்தென்ன
மாறியதா நம் வாழ்வின் கோலங்கள் - பசி
பட்டினி தாங்கவியலா ஓலங்கள்!

அடிமைகளாய் மாற்றப்பட்டு
அஃறிணையாய் நடாத்தபட்டோம்
வாழ்க்கையின் சுவையிழந்து தவிக்கின்றோம் - நாம்
வாழ்வதற்கே வழியின்றி துடிக்கின்றோம்!

லயத்தோடு வாழ்வுபட்டு
ஐந்தோடு அறிவும் கெட்டோம்
கொடிவினைபோல் நாமிங்கு வாழ்கின்றோம் - தினம்
இடி விழுந்து மரமாக வீழ்கின்றோம்!

மா வாங்க பணமில்லை
மருந்துக்கும் வழியில்லை
குழந்தைகள் விழிநீரால் எனை உறுத்த - கடன்
சுமையும் வந்தென்னை பயமுறுத்த!

மழை காலம் வந்தாலே
பரி;தவிக்கும் எம் சனங்கள்
மழை நாளில் நம் குடிசை ஓடொழுகும் - இங்கே
நட்டிருக்கும் பயிர் யாவும் கிடந்தழுகும்!

தலை நகரில் தரையெல்லாம்
பளிங்குபோல் பளபளக்கும்
எம் பரப்பில் பாதைகள் மேடுபள்ளம் - எப்போது
அதைக் காலம் மாற்றிச் செல்லும்?

துயர்துடைக்க வந்தவர்கள்
துரு மனதைக் கொண்டவர்தாம்;
எமக்காக குரல் கொடுப்போர் யாருண்டு - விதி
என்று சமாளிக்க ஆள் உண்டு!

எதிர்காலம் இருட்டாகி
நிகழ்காலம் வழிமாறி
நெருப்புக்கு நானின்று விறகானோம் - இந்த
வெந்தணலில் அழிகின்ற சருகானோம்!!!

Tuesday, November 1, 2011

இஹ்ராம் சிறகடிக்கும் உலகத்து பறவைகளே..

அகிலத்தை உருவாக்கி
அன்னையில் கருவாக்கி
சான்றோரை குருவாக்கி
படைத்திட்ட அல்லாஹ்வுக்கே
புகழனைத்தும்
அல்ஹம்துலில்லாஹ்..

களத்தினிலே கவிபாட
சிறுபெண்ணாய் நான் இங்கே
நேயர்களே அனைவருக்கும்
அன்பு ஸலாம்
அஸ்ஸலாமு அலைக்கும்!

இனிதான காலை இன்று
அழகாக புலர்ந்ததுவே..
ஹஜ் பெருநாள் இன்றெம்மில்
மகிழ்ச்சிப் பூ மலர்ந்ததுவே!

அன்புடனே பாசமிங்கு
அகத்தினிலே பெருகியதே..
பிரிந்திருந்த இதயங்கள்
ஒற்றுமையால் இறுகியதே!

இஹ்ராம் சிறகடிக்கும்
உலகத்து பறவைகளே..
இறையில்லம் கஃபாவில்
இறைஞ்சி துஆ கேட்டிடுங்கள்!

மக்கத்து மண்ணில் நீர்
மாண்புடனே இருக்கின்றீர்
சுவர்க்கத்து கல் முகர்ந்து
ப்ரார்த்தித்துக் கேட்டிடுங்கள்!

இப்றாஹீம் நபியவரின்
வியர்வையும் கலந்திருக்கும்
கஃபாவின் புனிதத்தின்
நாமத்தால் கேட்டிடுங்கள்!

இஸ்மாயில் நபி மற்றும்
ஹாஜரா அம்மையாரின்
இறையச்சம் போற்றியங்கே
இருகரம்தான் ஏந்திடுங்கள்!

ஸம்ஸம் நீரதுவாம்
நோய்களுக்கு திருமருந்தாம்
அருந்தியே சுகமாக
அல்லாஹ்விடம் கேட்டிடுங்கள்!

பாவக்கறை போக்கிடவும்
குறையெல்லாம் நீக்கிடவும்
பாசங்கள் மலர்ந்திடவும்
சாபங்கள் மறைந்திடவும்
இருகரம்தான் ஏந்திடுங்கள்
இறைஞ்சி துஆ கேட்டிடுங்கள்!

நல்மாற்றங்கள் விளைந்திடவும்
நயவஞ்சகம் தொலைந்திடவும்
நானிலம் சிறந்திடவும்
நாசகாரம் துறந்திடவும்
இருகரம்தான் ஏந்திடுங்கள்
இறைஞ்சி துஆ கேட்டிடுங்கள்!

வல்லவன் ரஹ்மத் கிடைத்திடவும்
ஷைத்தானின் வில்லங்கம்
உடைத்திடவும்
இனவெறிகள் கலைந்திடவும்
மனமுறிவுகள் குலைந்திடவும்
இருகரம்தான் ஏந்திடுங்கள்
இறைஞ்சி துஆ கேட்டிடுங்கள்!

திருமணத்தை செய்வதற்கு
சீதனத்தை கேட்டு நிற்கும்
துரு மனம்தான் திருந்தியிங்கு
துயரின்றி வாழ்ந்திடவே
இருகரம்தான் ஏந்திடுங்கள்
இறைஞ்சி துஆ கேட்டிடுங்கள்!

கற்புள்ள மாந்தர் நிதம்
கட்டுப்பாடாய் வாழ்ந்திடவும்
நட்புகொண்ட இதயங்கள்
விட்டுக்கொடுத்து பழகிடவும்
இருகரம்தான் ஏந்திடுங்கள்
இறைஞ்சி துஆ கேட்டிடுங்கள்!

கலகத்தில் தவிக்கின்ற
உலகமது அமைதியாவும்
இலங்கையில் வசிக்கின்ற
இளம் கைகள் உறுதியாகவும்
இருகரம்தான் ஏந்திடுங்கள்
இறைஞ்சி துஆ கேட்டிடுங்கள்!

நடுநிசியில் தொழுதிடவும்
நரகம் எண்ணி அழுதிடவும்
வாழ்வில் இன்பம் சேர்த்திடவும்
தீன் வழியில் கை கோர்த்திடவும்
இருகரம்தான் ஏந்திடுங்கள்
இறைஞ்சி துஆ கேட்டிடுங்கள்!

பாலகரே கேட்டிடுங்கள்..
பயபக்தியுடன் கேட்டிடுங்கள்..
ஹாஜிகளே கேட்டிடுங்கள்
அழுதின்றே கேட்டிடுங்கள்!

ஈத் முபாரக்!!!

Saturday, September 24, 2011

கறுப்பு மாதம்





வர்ணத்தில் கறுப்பென்றால்
பலருக்கும் பிடிப்பில்லை..
மாதத்தில் கறுப்புண்டு
அறிந்தவர்கள் பலரில்லை!

வடபுலத்து முஸ்லிம்கள்
படபடத்த நாளொன்று..
வருகின்ற அக்டோபர்
வருடங்கள் இருபத்தொன்று!

தீயவை அழித்துவிடல்
மனிதகுல தர்மம் தான்..
இனமொன்றை துடைத்தழித்தால்
அதற்கு பெயர் வனமம் தான்!

சொத்துக்கள் சொந்தங்கள்
பலிகொடுத்தோர் ஏராளம்..
இனி வாழ்வில் எமக்கெல்லாம்
இசைக்கலாமா பூபாளம்?

ஒக்டோபர் மாதமிங்கு
கறுப்பாக ஆயிற்று..
ஒட்டுமொத்த வாழ்க்கையும்
இருட்டாகிப் போயிற்று!

அந்திவான பறவைகள்
முகாரிராகம் பாடியது..
சந்தோஷம் எமைவிட்டு
தொலைதூரம் ஓடியது!

எமை அறிந்தோர் எமக்காக
இப்போது யாரங்கே?
மண் அலைந்து விளையாடிய
எங்களது ஊர் எங்கே?

தாய் தந்தை நாமெல்லாம்
மகிழ்ந்திருந்த வீடெங்கே?
பால் தந்து எமக்குதவிய
என் வீட்டு ஆடெங்கே?

அநாதையாய் நாமெல்லாம்
அடிபட்டு இருக்கையிலே..
அவர்களங்கு சொகுசாக
அமர்ந்திருந்தார் `இருக்கையிலே'

தாய்நாட்டில் எம் உரிமை
மொத்தமாக குறைந்ததுவே..
நாய் கூட எமைப்பார்த்து
ஏளனமாய் குரைத்ததுவே!

சோகங்கள் துயரங்கள்
சொந்தமாய் மாறியது..
தென்றல் இனி இல்லையென
அனல் காற்று கூறியது!

எதையும்தான் பாராமல்
துரத்தப்படடு வந்த துயர்..
சுட்டாலும் அழியாது
போகும் வரை எமது உயிர்!!!

Sunday, July 31, 2011

என் செய்வேன் நான்?

பேனா மைகொண்டே
சோகங்களை
கக்கிவிட நினைக்கும்
வாடிப்போன
என் இளமையே..

இளமையின் இறுமாப்பில்
சிக்கியழிந்து
சீர்கெட்ட
என் இதயமே..

இதயத்தின்
புலம்பல்களோடு
நித்தமும் கழிகின்ற
என் இரவுகளே..

உங்களுக்குத்தெரியுமா
என் சோகங்கள்?

மனிதர்களை
நான் நினைத்தேன்
நியாயத்தின் பங்காளிகளாக..
அவர்களோ நடந்தார்கள்
காசின் கூட்டாளிகளாக!

அவர்களை
நான் நினைத்தேன்
சத்தியத்தின் அறிவாளிகளாக..
அவர்களோ நடந்தார்கள்
காசு திண்ணும் பெருச்சாளிகளாக!

அவர்களை நான் நினைத்தேன்
நியாயத்தின் காப்பாளர்களாக..
அவர்களோ மாறினார்கள்
பணக்காரன்பேச்சு கேட்பவர்களாக!

தலைவலிக்கு
தைலம் தடவும்
கைகளை விடவும்..
தூர இருந்து
ஆறுதல் சொல்பவர்கள்
மகானாக தெரிகின்றார்கள்!

என்செய்வேன் நான்
இத்துன்பம் ஏன்???

Saturday, May 21, 2011

போலி மனிதர்கள் !

கூடுகட்டிக் குருவி வாழும்
கூட்டை உடைப்பவன் இருக்கிறான்..
பாடுபட்டு வாழ்க்கையோட்டும்
மனிதனை வெறுப்பவன் இருக்கிறான்!

போட்டி போட்டு பொறாமையிலே
வெந்து அழிபவன் இருக்கிறான்..
காட்டிக்கொடுத்து மகிழ்ச்சியடையும்
மானிடனும் இருக்கிறான்!

தவறுசெய்யா பெண்ணைப்பற்றி
தவறு சொல்பவன் இருக்கிறான்..
கயிறுகொடுத்து தூக்குபோட
சொல்லிக் கொடுப்பவன் இருக்கிறான்!

பணத்துக்காக பிற மனிதரின்
தலையெடுப்பவன் இருக்கிறான்..
குணத்தை என்றும் மதிக்காமல்
குறை கூறுபவன் இருக்கிறான்!

தோற்றம் பார்த்து யாவரையும்
எடை போடுபவன் இருக்கிறான்..
கைதூக்கி விட்டவனின்
கால் வாருபவன் இருக்கிறான்!

உறுதியாக வாக்களித்து
கழுத்தறுப்பவன் இருக்கிறான்..
இறுதிவரை பொறாமையிலே
பொருமுபவன் இருக்கிறான்!

பிறருடைய மனசை என்றும்
புண்படுத்துபவன் இருக்கிறான்..
வார்த்தைகளால் கத்திசெய்து
துன்புறுத்துபவன் இருக்கிறான்!

வஞ்சம்கொண்டு நஞ்சுடனே
பழகுபவன் இருக்கிறான்..
மனசாட்சி இறந்து போய்
வாழ்பவனும் இருக்கிறான்!!!

Tuesday, March 8, 2011

உம்மாவுக்கு!

உம்மா!
பிடிக்கவில்லை...
ஊரில் நீங்களும்
தூரத்தில் நானுமாய்
இருக்கும் இந்தக்காலங்கள்!

கிணற்று நீர்குளித்து
மொட்டை மாடியில்
குளிர்காயும் சுகம் இங்கில்லை!

அன்று...
வாப்பாவும் நீங்களும்
என் நுனி விரல் பிடித்து
மொண்டசூரிக்கு
அழைத்துப்போன போது...
பாடசாலையின்
முதல்நாள் குழந்தையின்
அழுகை தோன்றவில்லை எனக்கு!

ஆனால் இப்போதுகளில்
'அத்துல அய்யாவின்'
'ஸ்கூல் சர்வீஸ்'
வேனுக்குள் அடைத்து
தனியாக பாடசாலைக்கனுப்பிய
நாட்கள் போல வெறுத்துப்போய்
எல்லாம் கிடக்கு!

தூரப்பாடசாலை போவதால்
அனைவரையும்
விட்டுப்பிரிய மனமின்றி
பரீட்சையில் வேண்டுமென்றே
பதில் எழுதாத
சின்னக்குழந்தை நான் அன்று..

நினைத்திருப்பேனா
இப்படியொரு
நிலைமை வந்து
புத்திசாலித்தனமாய்
தூரவாக்கும் என்று?

என் முன்னேற்றங்களுக்காக
உங்கள் எல்லோரையும்
பிரிந்திருந்தாலும்
தங்கையுடனும்
தம்பியுடனும்
பிடித்த சண்டைகள்
என் நெஞ்சுக்குள்
இன்னும் பசுமையாகவே!

சாச்சி வீடு..
அஹதிய்யா...
டியூஷன்...
என்றிருந்த எனக்கு...
இன்றைய
வாழ்க்கையை நினைத்தால்
அழுகை வருது உம்மா!

என்ன செய்ய?
என் வாழ்க்கையின்
வெற்றிப் படிகளை எட்டி
நானொரு நாள்
முன்னேறி வருவேன்...
அதுவரை
கொஞ்சம் பொறுத்திருங்கள்
உம்மா..
வாப்பாவுக்கும் சொல்லுங்கள்!!!

Sunday, February 13, 2011

சிப்பிக்குள் முத்தாகி!



என் கண்ணே உன்னிடமே
இவன் வேண்டுகோள்..
காலமெல்லாம் நீயே தான்
என் ஊன்றுகோல்!
உயிரோடு நானிருக்க
உணர்வோடு வாழ்ந்திருக்க
நீயன்றோ எனக்கான
என் தூண்டுகோல்!

கல்லூரியில் ஒரு நாளில்
எனை வாழ்த்தினாய் - பதில்
சொன்ன போது நீ தலை தாழ்த்தினாய்!
எனைப்பார்த்து கண்காட்டி
என்மனசை தடுமாற்றி
உன் பார்வையில் என்னை
உடன் வீழ்த்தினாய்!

உயிருக்குள் விளையாடி
எனை மோதினாய் - கனவுகளில்
வந்தெந்தன் தலை கோதினாய்!
கவியெழுதி நாள் செல்ல
உன் எண்ணம் நான் கொள்ள
காதலின் கீதங்கள் தினம் ஓதினாய்!

விபரங்கள் தெரிந்திட்ட
நாள் முதலாய் நாம்..
எனக்கு நீ உனக்கு நான்
என்றிருந்தோமே
சுகமின்றி நானிருந்த
ஓரு நாளில் நீ
எனக்காக கோயிலுக்கு சென்றிருந்தாயே!

மாந்தோப்பில் மா பறிக்கும்
நேரத்தில் நான்...
விழுவேனோ என்று நீ
பயந்திருந்தாய் ஏன்?
விழுந்தெந்தன் கைகால்கள்
புண்ணானதும்
உன் கண்ணில் நீர் ஆறாய்
ஓடியதும் ஏன்?

கடற்கரையில் சிப்பிதேட
சென்றிருந்தோமே - சிப்பிக்குள்
முத்தாகி நின்றிருந்தோமே!
காதலுடன் இவ்வாழ்க்கை
என்றென்றும் எப்பொழுதும்
வாழ்நாளில் நிதம் வேண்டும்
என்றிருந்தோமே!

வாழ்வு பற்றிய விடயங்களை
சித்தரித்தோமே - கவலை தரும்
அனைத்தையும் கத்தரித்தோமே..
நாம் வாழ நலமாக
வாழ்நாளில் சுகமாக
புரிந்துணர்வு வேண்டுமென
உச்சரித்தோமே!


பொறாமையான கண்களுக்கு
கொள்ளி வைத்தோமே..
நமை தவிர யாவரையும்
தள்ளி வைத்தோமே!
நம் அன்பில் எப்போதும்
துயர்வந்த போதினிலும்
நமக்குள்ளே காதலையே
அள்ளி வைத்தோமே!

உனக்காக என் ஆயுள்
நீண்டிருக்குமே - என்று
நான் சொல்லி இரு ஆண்டிருக்குமே!
அந்நாளின் இன்பங்கள்
உனைப்பிரிந்த துன்பங்கள்
இப்போதும் என் நெஞ்சில்
வாழ்ந்திருக்குமே!

எப்படியோ நம் காதல்
வீட்டில் தெரிய - வீட்டாரின்
பேச்சினிலே தீயாய் எரிய!
காரணம் தான் என்னவென்று
கடைசியிலே சொன்ன போது
சீதனம் தான் அதுவென்று
கிடைத்தது அறிய!

உன் தகப்பன் எனக்கும் தான்
தந்தையன்றோ? அன்றென்னில்
உதித்த எண்ணம் விந்தையன்றோ?
பல நாழிகை சிந்தித்தும்
பலபேரை சந்தித்தும்
குழம்பிப் போனது என் சிந்தையன்றோ?

வெளிநாடு போவதாய் நான்
சொல்லி முடிக்க - அக்கணமே
கவலையால் உன் உதடு துடிக்க!
சரிஎன்றும் சொல்லாமல்
துணிவும் தான் இல்லாமல்
புறப்பட்டேன் அன்று நான்
உள்ளம் வெடிக்க!

உடல் இளைக்க மாடாய் நான்
அங்கு உழைக்க - அவை மீறி
உன் நினைப்பு நெஞ்சைத்துளைக்க!
நான் என்னை திடப்படுத்தி
எனில்உன்னை நிலைநிறுத்தி
பொறுத்தேனே கண்ணே
நம் காதல் நிலைக்க!

ஆண்டிரண்டு கழிந்து
உனைத்தேடி வந்தேனே - ஓடி வந்து
நீ அணைப்பாய் என்றிருந்தேனே!
எனைப்பார்த்து நீயும் தான்
வேர்க்கின்றாய் ஏன்?
கதவிடுக்கில் ஒளிந்திருந்து
பார்க்கின்றாய் ஏன்?

உன் உயிரில் நான் பாதி
என்று இணைத்துக்கொள்..
வா பெண்ணே வந்தென்னை
உடன் அணைத்துக்கொள்!!!