என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Sunday, December 11, 2011

நெருப்பு வாழ்க்கை

காலங்கள் கடந்தென்ன
நாமிங்கு கிடந்தென்ன
மாறியதா நம் வாழ்வின் கோலங்கள் - பசி
பட்டினி தாங்கவியலா ஓலங்கள்!

அடிமைகளாய் மாற்றப்பட்டு
அஃறிணையாய் நடாத்தபட்டோம்
வாழ்க்கையின் சுவையிழந்து தவிக்கின்றோம் - நாம்
வாழ்வதற்கே வழியின்றி துடிக்கின்றோம்!

லயத்தோடு வாழ்வுபட்டு
ஐந்தோடு அறிவும் கெட்டோம்
கொடிவினைபோல் நாமிங்கு வாழ்கின்றோம் - தினம்
இடி விழுந்து மரமாக வீழ்கின்றோம்!

மா வாங்க பணமில்லை
மருந்துக்கும் வழியில்லை
குழந்தைகள் விழிநீரால் எனை உறுத்த - கடன்
சுமையும் வந்தென்னை பயமுறுத்த!

மழை காலம் வந்தாலே
பரி;தவிக்கும் எம் சனங்கள்
மழை நாளில் நம் குடிசை ஓடொழுகும் - இங்கே
நட்டிருக்கும் பயிர் யாவும் கிடந்தழுகும்!

தலை நகரில் தரையெல்லாம்
பளிங்குபோல் பளபளக்கும்
எம் பரப்பில் பாதைகள் மேடுபள்ளம் - எப்போது
அதைக் காலம் மாற்றிச் செல்லும்?

துயர்துடைக்க வந்தவர்கள்
துரு மனதைக் கொண்டவர்தாம்;
எமக்காக குரல் கொடுப்போர் யாருண்டு - விதி
என்று சமாளிக்க ஆள் உண்டு!

எதிர்காலம் இருட்டாகி
நிகழ்காலம் வழிமாறி
நெருப்புக்கு நானின்று விறகானோம் - இந்த
வெந்தணலில் அழிகின்ற சருகானோம்!!!