என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Wednesday, January 18, 2012

துயரச்சுமை

இடம் பெயர்ந்த நம் மண்ணை
நிதம் எண்ணி பதறுகிறோம் - நாம்
திசை ஏதும் அறியாமல் துயர்
இசை பாடி கதறுகிறோம்!

விலாசங்கள் இழந்து பல
வருஷங்கள் ஆயிடுச்சி – நல்
வழியெதையும் காட்டாமல்
தன் பாட்டில் ஓடிடுச்சி!

பசி வந்து பரிதவித்தால்
அதைப்போக்க வழியில்லை – நடு
நிசி நேரப் பொழுதினிலும்
துளியளவும் தூக்கமில்லை!

விமானத்தைக் கண்டாலே
குழிக்குள்ளே பதுங்கி நின்றோம் - இன்று
முகாம் தன்னில் வாழ்வதனால்
ஏழைகளாய் ஒதுங்கி நின்றோம்!

மனம்போன போக்கில்தான்
பிணம்போல வாழ்ந்திருந்தோம் - நிதம்
மன உளைச்சல் தாளாமல்
மரணம் தா எமக்கு என்றோம்!

தகரத்தால் அடைத்திருந்த
குடில்களிலே தவித்திருந்தோம் - நாம்
பூச்சரித்த அரிசி தின்று
வயிற்றுளைவால் துடித்திருந்தோம்!

படுத்திருந்தால் நுளம்புத் தொல்லை
சுகாதார வசதியில்லை - நோய்
நொடிகள் காய்ச்சலினால்
எழுந்திருக்க சீவனில்லை!

உருவங்கள் அழிஞ்சிடுச்சி
பருவங்கள் கழிஞ்சிடுச்சி - நம்
வயசான காலத்திலே
கைகால்கள் முடங்கிடுச்சு!!!