என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Thursday, June 28, 2012

நினைவுகளின் நெரிசல்

மனிதம் மரித்த உலகினிலே
மனித நேயம் பார்க்கிறாய்..
கள்ளிப் பாலைத் தந்துவிட்டு
குடிக்குமாறு கேட்கிறாய்!

நீதி உலகில் அழிந்த பின்பு
நீதி பற்றி பேசுகிறாய்..
ஆதி மனிதன் ஆடையின்றி
இருந்தது போல் கூசுகிறாய்!

இறைவன் அருளைத் தரும்போது
அதைத் தடுப்பது பற்றி நினைக்கிறாய்..
அழுகிற மனிதர் துன்பத்தில் நீ
புதுமையாய் இன்பம் காணுகிறாய்!

கொட்டும் மழையிலும்
கொளுத்தும் வெயிலிலும்
உழவனை நிதமும் காணுகிறாய்..
உழைப்பவன் அவனின் கூலியைக் கேட்டால்
களைப்பாய் இருப்பதாய்க் கூறுகிறாய்!

சீதனம் வேண்டாம் என்பவனை நீ
மருமகனாக ஏற்கின்றாய்..
உன் மகனிருந்தால் இன்னொரு பெண்ணின்
காசைப் பிடுங்கப் பார்க்கின்றாய்!

அன்னையின்றேல் அவனியிலே நாம்
பிறப்பது எப்படி என்கின்றாய்..
பெண்ணைப் பார்த்து தீயன உரைத்து
பெண்ணைக் கேவலமாக்குகிறாய்!

உனக்கென உயிர்தர இருப்பவன் அவனின்
உயிரைக் கொல்லப் பார்க்கிறாய்..
நட்பின் இலக்கணம் நாம் தான் என்று
நடிப்புக்கிடையில் கூறுகிறாய்!

இரவு நேரப் பெண்கள் பலருடன்
உல்லாசம் காணப் போகிறாய்..
விடிந்ததும் நீதான் உத்தமன் என்று
கோயில் குளம் போய் காட்டுகிறாய்!

அகம் முழுவதும் அழுக்கு கொண்டு
எல்லோரிடமும் பழகுகிறாய்..
உண்மையாக வாழ்பவர் எவரோ
அவரை விட்டு விலகுகிறாய்!!!