என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Thursday, June 28, 2012

நேசத்தின் ஒலிகள்

அண்ணா எப்படியிருக்கிறாய்?
மகனே சுகமாயிருக்கிறாயா?

வீட்டாரின்
கடித வரிகள்..
வரிகளல்ல - இது
பாசத்தின் ஒலிகள்!

பருவம் தொட்ட
நாள் தொடக்கம்
வேலையெல்லாம்
வெளிநாட்டில்..

வெளி ஆளாய் மாறாமல்
அவன் நினைப்பெல்லாம்
தன் வீட்டில்!

தவணை முறையில்
அவனுக்கு விடுமுறை..
வீடு வந்தால்
சுகமாய் விடியும்
அவனது வைகறை!

அண்ணா.. மகனே
என்று பாசம் சொட்டும்..
அந்த அன்பின் உருக்கத்தில்
கண்ணீர் முட்டும்!

அவன் கைதொடும்
தூரத்தில் நிலவு எட்டும்..
சொர்க்க வீடு பாசத்தால்
களை கட்டும்!

உழைத்து
ஓடான தந்தை - அதை
நினைத்து நோயான
அன்னை - தன்
திருமணத்துக்காய்
காத்திருக்கும் தங்கை!

அன்னையை தந்தையை
வாழ வைக்க வேண்டும்..
தன்னைப் பெற்ற வேர்களின்
தாகம் தீர்க்க வேண்டும்!

கனிமொழி தங்கையை
கரைசேர்க்க வேண்டும்..
கரை சேர்க்க வேண்டுமெனில்
காசுழைக்க வேண்டும்!!!