என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Sunday, January 19, 2014

வாழ்க்கை எனும் நாடக மேடை!


தோற்றத்தில் நைந்துள்ளோமா
ஏற்றத்தில் தொய்ந்துள்ளோமா
மாற்றங்கள் நடக்கும் என்றே
நாற்றத்தில் வாழ்கிறோமா?

கறுத்த உடலோடும், வெயிலோடும்
பெருத்த மழையோடும், பனியோடும்
சிறுத்த லாபத்துக்காகN;வண்டி
பொறுத்துப் பொறுத்து இருக்கிறோமா?

கரிய புகை படிந்த காம்பறாவில்
சிறிய, பெரிய பிள்ளைகளுடன்
அரியதொரு வாழ்வைத்தான்
தெரியாமலே கடத்திவிட்டோம்!

அன்னை போல் மதித்தேதான்
மண்ணை நாம் மிதித்தோமே
பெண்ணையும், ஆணையும்
கண்ணைப் போல் காத்தோமே!

மலை வாழ்க்கை பழகிடுச்சு
இலைசாயம் இனிச்சிடுச்சி
தலை தோறும் வறுமை எனும்
அலை வந்து அடிச்சிடுச்சு!

சாதுவாக வாழ்கின்றோம்
மாதுகளை மதிக்கின்றோம்
தீது என நன்குணர்ந்து
சூது கூட தவிர்த்திருந்தோம்!

சுமை வந்து நெரித்த போதும்
எமைப் பற்றி கவலையில்லை
இமை போல துரை காப்பார்
நமை என்று நம்பி நின்றோம்!

துடுப்பு இல்லா ஓடம் போல
இடுப்பு கடுத்தே வேலை செய்து
அடுப்பு மூட்டிகொஞ்சம் சமைத்து
விடுப்பு பார்க்கும் வாழ்க்கை நமதே!

படித்த இளைஞர் வாழ்க்கையாவும்
குடித்துக் குடித்தே வீணாய் போகும்
வடித்த கண்ணீர் ஆவியாகும்
நடித்த வாழ்க்கை மேடை ஏறும்!

நாளை எப்படி கழியும் என்று
வேளை தோறும் சிந்தித்தேதான்
காலை மாலை ஓலைக் குடிலில்
ஏழை வாழ்க்கை முடிஞ்சு போகும்!!!