என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Thursday, June 24, 2010

ஒரு வீணை அழுகிறது!

பவ்வியமாய் நடந்து வந்து
பால்நிலா நீ
ஆசிர்வாதம் கேட்டாய்..
சுயநலம் என அறிந்திருக்கவில்லை
சுமங்கலியாய் வாழ் என்றேன்!

இன்று
வேதங்கள் நிஜமிழந்து
மந்திரங்களும்
பொய்யாகிப்போனது!

கண்மணியே!
என் மூச்சடங்கும் நேரம்
நெருங்கிக் கொண்டிருப்பதை
அறிய மாட்டாய் நீ!

ஒரு நிலவினை போல
மெது மெதுவாய் தேய்கிறேன்..
மீண்டும் உதிக்கவே
முடியாத படிக்கு!

காதலில் வாழ்ந்தவளே!
என் அஸ்தமனத்துக்குப் பின்
எப்படி சீர்படுத்திக் கொள்வாயோ
உன் வாழ்வை?

படுக்கையில் நான் விழுந்தால்
பாவி என்னை மன்னித்து விடு!
புதுமைப் பெண் நீ என்று
பூமிக்கே காட்டி விடு!

ஒரு வேளை
நான் மீளா துயிலில்
ஆழ்ந்து விட்டால்..
காவலனை தேடிக் கொள்
கட்டாயம்!

நரம்பில்;லா வீணை நான்
நடுவீதியில் எறியப்படுவதில்
தப்பேதுமில்லையே?

வெள்ளாடை தரித்து நீ
வெறுமனே இருந்திடாதே!
வாழும் வரை வசந்தமாய்
வாழுவதை மறந்திடாதே!

பலி சொல்லும் உலகுக்கு
பயந்து நீ சாகாதே!
செவியிரண்டை மூடிக் கொள்
ஊர் பேச்செண்ணி வேகாதே!

என் துணைவிக்கு ஒன்றென்றால்
என் ஆவி சாந்தம் அடையாது!
ரோஜாவாய் பவனி வர
உனக்கிருக்கும் தடை ஏது???