என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Thursday, June 28, 2012

இரவில் அழுதல்

ஏ பெண்ணே!
திசை தெரியாத காட்டுக்குள்
பூப் பறிக்கப் போகாதீர்கள்..
கரை காணா சமுத்திரத்தில்
நீச்சலடிக்கப் புறப்படாதீPர்கள்!

இந்த அற்பர்களின்
இச்சைக்கு உங்களை
இரையாக்கி விடாதீர்கள்!

உங்கள் வீடுகளில்
வெளிச்சம் சேர்க்க - ஏன்
பிற குடும்பங்களைப்
பற்ற வைக்கிறீர்கள்?

சந்தர்ப்பம் அமையாமல் - சில
சந்திரர்கள் யோக்கியனாய்
சஞ்சரிக்கிறார்கள் - அவர்களுக்கு
சந்தர்ப்பமளித்து
சஞ்சலப்படுத்தாதீர்கள்!

வயிற்றுப் பிழைப்புக்கு
வழியுண்டு ஏராளமாக..
வயிற்றெரிச்சல் பெற்று ஏன்
வாழ்க்கின்றீர் ஏளனமாக?

பெற்றோரும் மற்றோரும்
உறவுகளும் பிள்ளைகளும்
அறிந்தால் தாங்குவாரா
உம்மைப் பற்றி?

அற்ப ஆசைக்கு
அலைபவர்கள் பகலில்
இராமர்களாக வாழ்கிறார்கள்..
அவர்களிடமா
ஆடை வாங்கிக் கேட்கிறீர்கள்?;

வேண்டாம்..

கௌரவமாக வாழ்வதாய்
ஊருக்கு காட்டிக்கொண்டு
பகலில் சந்தோஷிப்பதற்காய்
இரவில் அழ வேண்டாம்!!!

எதிர்காலம்

நிர்ச்சலமான என் மனதில்
வாழ்வு பற்றிய எண்ணங்கள்
கருகியபடி!

முன்னேற்றங்கள் குறித்த
என் நம்பிக்கைப் புள்ளிகளை
அழிக்கின்றன
காலத்தின் கொடூர கைகள்!

வறுமைக்கோட்டின் கீழ்
வழுக்கி விழுந்த எம் நிலையை
உயர்த்திப் பார்க்க
உறுதியில்லை!

தோள் சுமக்கும்
துயர்களை விட
மேலதிக பொருளாதாரச் சுமை
முடக்கிப் போட்டதெம்மை!

கடந்த காலம்
முடிந்துவிட்டது..
நிகழ்காலம் கழிகிறது..
எதிர்காலம்???

Thursday, March 15, 2012

லயத்து வீடும் கரத்தை மாடும்

கொழுந்த நாம பறிச்சு பறிச்சே
கையி காலு முறிஞ்சி போச்சி
தேங்கா மாவு குதிர வெல
ஒழக்கிறதும் எரிச்சலாச்சு

சப்பாத்து இன்றி போனதால
புள்ள படிப்பு பாழா போச்சி
பட்டணம் போன மூத்தவனின்
சம்பளமும் கொறஞ்சி போச்சி

மானியம், கடனுதவி
அர்த்மெல்லாம் பிழச்சி போச்சி
வாழையடி வாழையாக
கஷ்டங்களே நிலைச்சி போச்சி

நம்பிப் போட்டோம் வாக்குகள
எல்லாமே மோசம் போச்சி
தோரேமாரின் வேஷம் எல்லாம்
நல்லாவே வெளுத்துப் போச்சி

லயத்து வீடும் கரத்தை மாடும்
எங்களுடைய சொத்தாப் போச்சி
மாடி வீடும், மஹத்தியா பட்டமும்
அவங்களோட சேர்ந்துப் போச்சி

குடிக்கலாம்னு பாத்தோமே
கொஞ்சமாவது கஞ்சி வச்சி
கூரை ஓட்டை தண்ணி வந்து
அடுப்பும் இங்கு நூந்து போச்சி!!!

ஏழைத் தாய்

மகனே!
மாதங்கள் சில கழிந்தால்
மண்ணில் நீ பிறந்திடுவாய்..
கருவறை இருட்டைவிட்டு
வெளியுலகம் வந்திடுவாய்!

உன்னை என்னில் ஏந்தியபின்
உள்ளுக்குள் எத்தனை
பயமிருந்தது தெரியுமா?
ஆனால்
வரட்டுப் பிடிவாதங்கள்
வாழ்க்கைக்கு உதவாது என்பதால்
வாழ முடிவெடுத்தேன்
உனக்காக கண்ணா!

காலப் பேரலை என்னைக்
காயப்படுத்திப் போட்டபின் - உன்
நல் வரவொன்றையே
நாளும் எதிர்பார்க்கிறேன்!

முடிந்தவரை மட்டுமல்ல
முடிவு வரை முயற்சித்தேன்
ஆழ்கடல் போன உன் தந்தை
அந்திமத்தை தழுவினாரே!

வாழ்க்கையோடு நான்
முரண்பட்ட போதெல்லாம்
உன்னைக் காட்டி
இயற்கை என்னை
வாழச் சொன்னது!
உன் எதிர்கால வாழ்வெண்ணி
உள்ளுக்கள் குமைகின்றேன்..

உறவுகள் யாரும்
உண்மையாயில்லை..
நட்பு கொண்டவர்கள்
நடிக்கின்றார்கள்..
தனவந்தர்களிடம்
தாராள மனமில்லை..
கோடீஸ்வரர்களிடம்
கொடுக்கும் இதயமில்லை!

கண்ணா
புரிகிறதா உன் தாயின்
புலம்பல்கள்?

மகனே..
இந்த குரூர உலகில்
உன்னை பிரசவிப்பதற்காய்
நாளை எண்ணில் கோபப்படாதே
ஆத்திரப்படாதே!

ஏனெனில்
நான் புரட்சித் தாயல்ல..
வாழ்வாதாரம் இழந்து
வாழும் திக்குத் தெரியாத
ஓர் ஏழைத்தாய்!!!

Tuesday, February 28, 2012

தேடல்

அன்பனே
எங்கிருக்கிறாய்
எப்படியிருக்கிறாய்?
முதலில் இருக்கிறாயா
நீ உயிருடன்?

காதல் சொன்னவனே
உன் காரிகையிவளை
மறந்துவிட்டாயா?
பதில் நான் சொல்லாததால்
உன் காதலைத்
துறந்துவிட்டாயா?

என்னைப் பார்த்தால்
நானென்று
அடையாளம் காணுவாயா?
எதிர்த்துச் சென்றவள் என
மௌனத்தைப்
பேணுவாயா?

என்னைக் கண்டால்
இதயம் பூத்து
ஓடி வருவாயா?
இதயத்தை
ஒடித்தவள்தானே என
உன் உள்ளம்
வாடி விடுவாயா?

உன்னுடன் பேசினால்
மகிழ்ச்சியாய் கேட்டிருப்பாயா?
இல்லை
என்னைத் தெரியாதென
வெறுப்பினால் கூறிடுவாயா?

மீண்டும் ஒருமுறை
உன்னைக் காண வேண்டும்..

ஆனாலும் ஓடிவந்து
உன் கை பிடிக்க முடியாது..
கதறியழ முடியாது..
என்னை ஏற்றுக்கொள் என
காலில் விழ முடியாது..
உனக்காக
காத்திருக்கவும் முடியாது!

அந்தகார இரவுகள்
அவஸ்தையில் கழிந்ததுபோல்..
அந்தரங்க வேதனை
அகம் முழுதும் எரித்ததுபோல்..

ஒரு பார்வை
ஒரு சிரிப்பு
மௌனம்
கண்களால் கையசைப்பு!

அத்தோடு முடியும்
நாம்
சந்தித்த பொழுதுகளும்
சிந்தித்த காதலும்...!!!

Wednesday, January 18, 2012

துயரச்சுமை

இடம் பெயர்ந்த நம் மண்ணை
நிதம் எண்ணி பதறுகிறோம் - நாம்
திசை ஏதும் அறியாமல் துயர்
இசை பாடி கதறுகிறோம்!

விலாசங்கள் இழந்து பல
வருஷங்கள் ஆயிடுச்சி – நல்
வழியெதையும் காட்டாமல்
தன் பாட்டில் ஓடிடுச்சி!

பசி வந்து பரிதவித்தால்
அதைப்போக்க வழியில்லை – நடு
நிசி நேரப் பொழுதினிலும்
துளியளவும் தூக்கமில்லை!

விமானத்தைக் கண்டாலே
குழிக்குள்ளே பதுங்கி நின்றோம் - இன்று
முகாம் தன்னில் வாழ்வதனால்
ஏழைகளாய் ஒதுங்கி நின்றோம்!

மனம்போன போக்கில்தான்
பிணம்போல வாழ்ந்திருந்தோம் - நிதம்
மன உளைச்சல் தாளாமல்
மரணம் தா எமக்கு என்றோம்!

தகரத்தால் அடைத்திருந்த
குடில்களிலே தவித்திருந்தோம் - நாம்
பூச்சரித்த அரிசி தின்று
வயிற்றுளைவால் துடித்திருந்தோம்!

படுத்திருந்தால் நுளம்புத் தொல்லை
சுகாதார வசதியில்லை - நோய்
நொடிகள் காய்ச்சலினால்
எழுந்திருக்க சீவனில்லை!

உருவங்கள் அழிஞ்சிடுச்சி
பருவங்கள் கழிஞ்சிடுச்சி - நம்
வயசான காலத்திலே
கைகால்கள் முடங்கிடுச்சு!!!

Wednesday, December 14, 2011

அதிகாரத்தின் அடக்குமுறை

அதிகார வர்க்கத்தின்
அடக்கு முறையில்
அடிக்கடி
என் உரிமை நசுக்கப்படுகிறது!

தவறு செய்தது நீ..
செய்திடாத குற்றத்துக்காய்
குட்டுப்படுகையில்
ரத்தக்கொதிப்பு அதிகமாகிறது!

தன்மானம் பற்றி
அடிக்கடி அங்கலாய்க்கும் நான்
அவமானம் என்றால்
எப்படி பொறுப்பேன்?

உன் மீதுள்ள
கொலை வெறியை
அடக்குவதற்குத்தான்
அடிக்கடி கண்ணீரை
துணைக்கழைக்கிறேன்!


குற்றம் புரிந்த உன் மனது
குறுகுறுக்கிறதோ இல்லையோ
பாவம்பட்ட என் மனது
வேதனையால் புறுபுறுக்கிறது!

உன் பிழைகளை
நீயே அழிக்கவும்
அதில் ஏமாந்து
ஷஅவன்| விளிக்கவும்
என்ன காரணம்?

ஓ..
உன் சல்லாபத்தால்
எத்தனைப்பேரை
சறுக்க வைத்தாய் நீ!

புரிந்து விட்டதெனக்கு!

உன்னைப் போல்
மேலாடை விலக்கி
மேலதிகாரியுடன்
களவாய் திரிய
எனக்கும் முடிந்திருந்தால்...

சில நேரம்
என் பிழைகளும்
திரைக்குப் பின்
மறைக்கப்பட்டிருக்கலாம்..

எனக்கு கீழிருக்கும்
இன்னொருத்தியின்
உரிமை
மறுக்கபட்டிருக்கலாம்!