என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Thursday, March 15, 2012

லயத்து வீடும் கரத்தை மாடும்

கொழுந்த நாம பறிச்சு பறிச்சே
கையி காலு முறிஞ்சி போச்சி
தேங்கா மாவு குதிர வெல
ஒழக்கிறதும் எரிச்சலாச்சு

சப்பாத்து இன்றி போனதால
புள்ள படிப்பு பாழா போச்சி
பட்டணம் போன மூத்தவனின்
சம்பளமும் கொறஞ்சி போச்சி

மானியம், கடனுதவி
அர்த்மெல்லாம் பிழச்சி போச்சி
வாழையடி வாழையாக
கஷ்டங்களே நிலைச்சி போச்சி

நம்பிப் போட்டோம் வாக்குகள
எல்லாமே மோசம் போச்சி
தோரேமாரின் வேஷம் எல்லாம்
நல்லாவே வெளுத்துப் போச்சி

லயத்து வீடும் கரத்தை மாடும்
எங்களுடைய சொத்தாப் போச்சி
மாடி வீடும், மஹத்தியா பட்டமும்
அவங்களோட சேர்ந்துப் போச்சி

குடிக்கலாம்னு பாத்தோமே
கொஞ்சமாவது கஞ்சி வச்சி
கூரை ஓட்டை தண்ணி வந்து
அடுப்பும் இங்கு நூந்து போச்சி!!!

ஏழைத் தாய்

மகனே!
மாதங்கள் சில கழிந்தால்
மண்ணில் நீ பிறந்திடுவாய்..
கருவறை இருட்டைவிட்டு
வெளியுலகம் வந்திடுவாய்!

உன்னை என்னில் ஏந்தியபின்
உள்ளுக்குள் எத்தனை
பயமிருந்தது தெரியுமா?
ஆனால்
வரட்டுப் பிடிவாதங்கள்
வாழ்க்கைக்கு உதவாது என்பதால்
வாழ முடிவெடுத்தேன்
உனக்காக கண்ணா!

காலப் பேரலை என்னைக்
காயப்படுத்திப் போட்டபின் - உன்
நல் வரவொன்றையே
நாளும் எதிர்பார்க்கிறேன்!

முடிந்தவரை மட்டுமல்ல
முடிவு வரை முயற்சித்தேன்
ஆழ்கடல் போன உன் தந்தை
அந்திமத்தை தழுவினாரே!

வாழ்க்கையோடு நான்
முரண்பட்ட போதெல்லாம்
உன்னைக் காட்டி
இயற்கை என்னை
வாழச் சொன்னது!
உன் எதிர்கால வாழ்வெண்ணி
உள்ளுக்கள் குமைகின்றேன்..

உறவுகள் யாரும்
உண்மையாயில்லை..
நட்பு கொண்டவர்கள்
நடிக்கின்றார்கள்..
தனவந்தர்களிடம்
தாராள மனமில்லை..
கோடீஸ்வரர்களிடம்
கொடுக்கும் இதயமில்லை!

கண்ணா
புரிகிறதா உன் தாயின்
புலம்பல்கள்?

மகனே..
இந்த குரூர உலகில்
உன்னை பிரசவிப்பதற்காய்
நாளை எண்ணில் கோபப்படாதே
ஆத்திரப்படாதே!

ஏனெனில்
நான் புரட்சித் தாயல்ல..
வாழ்வாதாரம் இழந்து
வாழும் திக்குத் தெரியாத
ஓர் ஏழைத்தாய்!!!

Tuesday, February 28, 2012

தேடல்

அன்பனே
எங்கிருக்கிறாய்
எப்படியிருக்கிறாய்?
முதலில் இருக்கிறாயா
நீ உயிருடன்?

காதல் சொன்னவனே
உன் காரிகையிவளை
மறந்துவிட்டாயா?
பதில் நான் சொல்லாததால்
உன் காதலைத்
துறந்துவிட்டாயா?

என்னைப் பார்த்தால்
நானென்று
அடையாளம் காணுவாயா?
எதிர்த்துச் சென்றவள் என
மௌனத்தைப்
பேணுவாயா?

என்னைக் கண்டால்
இதயம் பூத்து
ஓடி வருவாயா?
இதயத்தை
ஒடித்தவள்தானே என
உன் உள்ளம்
வாடி விடுவாயா?

உன்னுடன் பேசினால்
மகிழ்ச்சியாய் கேட்டிருப்பாயா?
இல்லை
என்னைத் தெரியாதென
வெறுப்பினால் கூறிடுவாயா?

மீண்டும் ஒருமுறை
உன்னைக் காண வேண்டும்..

ஆனாலும் ஓடிவந்து
உன் கை பிடிக்க முடியாது..
கதறியழ முடியாது..
என்னை ஏற்றுக்கொள் என
காலில் விழ முடியாது..
உனக்காக
காத்திருக்கவும் முடியாது!

அந்தகார இரவுகள்
அவஸ்தையில் கழிந்ததுபோல்..
அந்தரங்க வேதனை
அகம் முழுதும் எரித்ததுபோல்..

ஒரு பார்வை
ஒரு சிரிப்பு
மௌனம்
கண்களால் கையசைப்பு!

அத்தோடு முடியும்
நாம்
சந்தித்த பொழுதுகளும்
சிந்தித்த காதலும்...!!!

Wednesday, January 18, 2012

துயரச்சுமை

இடம் பெயர்ந்த நம் மண்ணை
நிதம் எண்ணி பதறுகிறோம் - நாம்
திசை ஏதும் அறியாமல் துயர்
இசை பாடி கதறுகிறோம்!

விலாசங்கள் இழந்து பல
வருஷங்கள் ஆயிடுச்சி – நல்
வழியெதையும் காட்டாமல்
தன் பாட்டில் ஓடிடுச்சி!

பசி வந்து பரிதவித்தால்
அதைப்போக்க வழியில்லை – நடு
நிசி நேரப் பொழுதினிலும்
துளியளவும் தூக்கமில்லை!

விமானத்தைக் கண்டாலே
குழிக்குள்ளே பதுங்கி நின்றோம் - இன்று
முகாம் தன்னில் வாழ்வதனால்
ஏழைகளாய் ஒதுங்கி நின்றோம்!

மனம்போன போக்கில்தான்
பிணம்போல வாழ்ந்திருந்தோம் - நிதம்
மன உளைச்சல் தாளாமல்
மரணம் தா எமக்கு என்றோம்!

தகரத்தால் அடைத்திருந்த
குடில்களிலே தவித்திருந்தோம் - நாம்
பூச்சரித்த அரிசி தின்று
வயிற்றுளைவால் துடித்திருந்தோம்!

படுத்திருந்தால் நுளம்புத் தொல்லை
சுகாதார வசதியில்லை - நோய்
நொடிகள் காய்ச்சலினால்
எழுந்திருக்க சீவனில்லை!

உருவங்கள் அழிஞ்சிடுச்சி
பருவங்கள் கழிஞ்சிடுச்சி - நம்
வயசான காலத்திலே
கைகால்கள் முடங்கிடுச்சு!!!

Wednesday, December 14, 2011

அதிகாரத்தின் அடக்குமுறை

அதிகார வர்க்கத்தின்
அடக்கு முறையில்
அடிக்கடி
என் உரிமை நசுக்கப்படுகிறது!

தவறு செய்தது நீ..
செய்திடாத குற்றத்துக்காய்
குட்டுப்படுகையில்
ரத்தக்கொதிப்பு அதிகமாகிறது!

தன்மானம் பற்றி
அடிக்கடி அங்கலாய்க்கும் நான்
அவமானம் என்றால்
எப்படி பொறுப்பேன்?

உன் மீதுள்ள
கொலை வெறியை
அடக்குவதற்குத்தான்
அடிக்கடி கண்ணீரை
துணைக்கழைக்கிறேன்!


குற்றம் புரிந்த உன் மனது
குறுகுறுக்கிறதோ இல்லையோ
பாவம்பட்ட என் மனது
வேதனையால் புறுபுறுக்கிறது!

உன் பிழைகளை
நீயே அழிக்கவும்
அதில் ஏமாந்து
ஷஅவன்| விளிக்கவும்
என்ன காரணம்?

ஓ..
உன் சல்லாபத்தால்
எத்தனைப்பேரை
சறுக்க வைத்தாய் நீ!

புரிந்து விட்டதெனக்கு!

உன்னைப் போல்
மேலாடை விலக்கி
மேலதிகாரியுடன்
களவாய் திரிய
எனக்கும் முடிந்திருந்தால்...

சில நேரம்
என் பிழைகளும்
திரைக்குப் பின்
மறைக்கப்பட்டிருக்கலாம்..

எனக்கு கீழிருக்கும்
இன்னொருத்தியின்
உரிமை
மறுக்கபட்டிருக்கலாம்!

Sunday, December 11, 2011

நெருப்பு வாழ்க்கை

காலங்கள் கடந்தென்ன
நாமிங்கு கிடந்தென்ன
மாறியதா நம் வாழ்வின் கோலங்கள் - பசி
பட்டினி தாங்கவியலா ஓலங்கள்!

அடிமைகளாய் மாற்றப்பட்டு
அஃறிணையாய் நடாத்தபட்டோம்
வாழ்க்கையின் சுவையிழந்து தவிக்கின்றோம் - நாம்
வாழ்வதற்கே வழியின்றி துடிக்கின்றோம்!

லயத்தோடு வாழ்வுபட்டு
ஐந்தோடு அறிவும் கெட்டோம்
கொடிவினைபோல் நாமிங்கு வாழ்கின்றோம் - தினம்
இடி விழுந்து மரமாக வீழ்கின்றோம்!

மா வாங்க பணமில்லை
மருந்துக்கும் வழியில்லை
குழந்தைகள் விழிநீரால் எனை உறுத்த - கடன்
சுமையும் வந்தென்னை பயமுறுத்த!

மழை காலம் வந்தாலே
பரி;தவிக்கும் எம் சனங்கள்
மழை நாளில் நம் குடிசை ஓடொழுகும் - இங்கே
நட்டிருக்கும் பயிர் யாவும் கிடந்தழுகும்!

தலை நகரில் தரையெல்லாம்
பளிங்குபோல் பளபளக்கும்
எம் பரப்பில் பாதைகள் மேடுபள்ளம் - எப்போது
அதைக் காலம் மாற்றிச் செல்லும்?

துயர்துடைக்க வந்தவர்கள்
துரு மனதைக் கொண்டவர்தாம்;
எமக்காக குரல் கொடுப்போர் யாருண்டு - விதி
என்று சமாளிக்க ஆள் உண்டு!

எதிர்காலம் இருட்டாகி
நிகழ்காலம் வழிமாறி
நெருப்புக்கு நானின்று விறகானோம் - இந்த
வெந்தணலில் அழிகின்ற சருகானோம்!!!

Tuesday, November 1, 2011

இஹ்ராம் சிறகடிக்கும் உலகத்து பறவைகளே..

அகிலத்தை உருவாக்கி
அன்னையில் கருவாக்கி
சான்றோரை குருவாக்கி
படைத்திட்ட அல்லாஹ்வுக்கே
புகழனைத்தும்
அல்ஹம்துலில்லாஹ்..

களத்தினிலே கவிபாட
சிறுபெண்ணாய் நான் இங்கே
நேயர்களே அனைவருக்கும்
அன்பு ஸலாம்
அஸ்ஸலாமு அலைக்கும்!

இனிதான காலை இன்று
அழகாக புலர்ந்ததுவே..
ஹஜ் பெருநாள் இன்றெம்மில்
மகிழ்ச்சிப் பூ மலர்ந்ததுவே!

அன்புடனே பாசமிங்கு
அகத்தினிலே பெருகியதே..
பிரிந்திருந்த இதயங்கள்
ஒற்றுமையால் இறுகியதே!

இஹ்ராம் சிறகடிக்கும்
உலகத்து பறவைகளே..
இறையில்லம் கஃபாவில்
இறைஞ்சி துஆ கேட்டிடுங்கள்!

மக்கத்து மண்ணில் நீர்
மாண்புடனே இருக்கின்றீர்
சுவர்க்கத்து கல் முகர்ந்து
ப்ரார்த்தித்துக் கேட்டிடுங்கள்!

இப்றாஹீம் நபியவரின்
வியர்வையும் கலந்திருக்கும்
கஃபாவின் புனிதத்தின்
நாமத்தால் கேட்டிடுங்கள்!

இஸ்மாயில் நபி மற்றும்
ஹாஜரா அம்மையாரின்
இறையச்சம் போற்றியங்கே
இருகரம்தான் ஏந்திடுங்கள்!

ஸம்ஸம் நீரதுவாம்
நோய்களுக்கு திருமருந்தாம்
அருந்தியே சுகமாக
அல்லாஹ்விடம் கேட்டிடுங்கள்!

பாவக்கறை போக்கிடவும்
குறையெல்லாம் நீக்கிடவும்
பாசங்கள் மலர்ந்திடவும்
சாபங்கள் மறைந்திடவும்
இருகரம்தான் ஏந்திடுங்கள்
இறைஞ்சி துஆ கேட்டிடுங்கள்!

நல்மாற்றங்கள் விளைந்திடவும்
நயவஞ்சகம் தொலைந்திடவும்
நானிலம் சிறந்திடவும்
நாசகாரம் துறந்திடவும்
இருகரம்தான் ஏந்திடுங்கள்
இறைஞ்சி துஆ கேட்டிடுங்கள்!

வல்லவன் ரஹ்மத் கிடைத்திடவும்
ஷைத்தானின் வில்லங்கம்
உடைத்திடவும்
இனவெறிகள் கலைந்திடவும்
மனமுறிவுகள் குலைந்திடவும்
இருகரம்தான் ஏந்திடுங்கள்
இறைஞ்சி துஆ கேட்டிடுங்கள்!

திருமணத்தை செய்வதற்கு
சீதனத்தை கேட்டு நிற்கும்
துரு மனம்தான் திருந்தியிங்கு
துயரின்றி வாழ்ந்திடவே
இருகரம்தான் ஏந்திடுங்கள்
இறைஞ்சி துஆ கேட்டிடுங்கள்!

கற்புள்ள மாந்தர் நிதம்
கட்டுப்பாடாய் வாழ்ந்திடவும்
நட்புகொண்ட இதயங்கள்
விட்டுக்கொடுத்து பழகிடவும்
இருகரம்தான் ஏந்திடுங்கள்
இறைஞ்சி துஆ கேட்டிடுங்கள்!

கலகத்தில் தவிக்கின்ற
உலகமது அமைதியாவும்
இலங்கையில் வசிக்கின்ற
இளம் கைகள் உறுதியாகவும்
இருகரம்தான் ஏந்திடுங்கள்
இறைஞ்சி துஆ கேட்டிடுங்கள்!

நடுநிசியில் தொழுதிடவும்
நரகம் எண்ணி அழுதிடவும்
வாழ்வில் இன்பம் சேர்த்திடவும்
தீன் வழியில் கை கோர்த்திடவும்
இருகரம்தான் ஏந்திடுங்கள்
இறைஞ்சி துஆ கேட்டிடுங்கள்!

பாலகரே கேட்டிடுங்கள்..
பயபக்தியுடன் கேட்டிடுங்கள்..
ஹாஜிகளே கேட்டிடுங்கள்
அழுதின்றே கேட்டிடுங்கள்!

ஈத் முபாரக்!!!