என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Tuesday, July 6, 2010

மலை நாட்டிலும் சுனாமிங்க!

தேகத்தை வருத்தி
தேயில பறித்தாலும் - அதற்குரிய
பாகத்தை கேட்கையில
பலிபாவம் எமக்காகும்!

மாவு வெல அரிசி வெல
எகிறிக்கிட்டே போவுதுங்க...
காவு கொள்ளும் வறுமையை
எதிர்த்திடுதல் எப்படிங்க?

ஆயாவிடம் புள்ளைங்கள
பார்க்க சொல்லி விட்ட போதும்
தாயா நின்னு பாத்துக்குமா
இல்லேன்னாலும் என்ன செய்ய?

பெரியவனு மாசம் முழுக்க
சளி வந்து படுத்த போதும்
வறியவன்னு தெரிஞ்சதால
வைத்தியரும் பாக்கயில்ல..

லயத்து குடிசக் காம்பிராவில்
மூனு கொமருப்புள்ளயோட
பயந்து பயந்து வாழ்ந்ததிலே
பாதி வாழ்க்க போயிடிச்சி!

ரொட்டி திண்ணு வளந்த வுடல்
குப்பை தொட்டி ஆனதில
யாருக்குமே வருத்தமில்ல..
வருத்தப்பட ஒருத்தனில்ல...

கரைநாட்டில ஒருநாளு
சுனாமினு வந்திச்சிங்க...
நம்ம வாழ்வில் தினம் அதுதான்
தயவு செஞ்சி வெளங்கிக்கிங்க!