என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Thursday, December 2, 2010

கடல் கொண்டு போகட்டும்!

பத்துரூபா கேட்டவளை
'பரதேசி' என்றவனில்
பண்பென்று என்ன இருக்க முடியும்?
அவள் பசி போக்க கேட்டிருப்பாள்
என்று மனம் சொல்லுகையில்
இருதயம் சுக்குநூறாய் ஒடியும்!

நாகரீகம் மறந்தவனை
நாய் கூட மதிக்காது
நங்கையர் சொல்லித்தானா விளங்கும்?
பாவம்..
பலிசொல்லை ஏற்காமல்
பாவையரை வதைப்பவனை
படைத்தவனே தண்டிப்பான் சுணங்கும்!

விதி செய்த சதியினிலே
விலைபோகும் மாதுகளை
எப்படி நாம் காப்பாற்ற இயலும்?
வெறும் பணத்துக்காய்
ஆசைப்பட்டு வீணாகும் சிலபேரை
மொத்தமாக அள்ளி செல்லும் புயலும்!

அகதியாக மாற்றப்பட்டு
அகம் நொந்து வாழ்வோரை
அரவணைக்கும் நாள் என்று வருமோ?
தொலைந்து போன சொந்தங்களை
தொலைவில் சென்று தேடினாலும்
இனியவர்களை மீட்டித்தான் தருமோ?

போலியாக பழகியதும்
அன்பென்று நடித்ததுவும்
ஒருநாளில்
உணர்வு கிழித்து வதைக்கும்..
அன்று..
பேராசைப் பட்டதாலே
மனிதமின்றி வாழ்ந்த வாழ்க்கை
அணுவணுவாய்
உயிரையே சிதைக்கும்!

இனத்துவேசம் அறியாத
இலங்கைத்தாய் பெற்ற எமை
பிரித்திட்ட பூதமே நீ அழிக..
உனை என்றென்றும் கூர்வாளால்
ஒழித்திடுமே எம் கைகள்
ஒற்றுமையே உன் பாதம் பதிக!

பாடசாலை பருவத்து
சிறார்களை வைத்து நிதம்
தொழில் செய்து
பிழைப்பவர்கள் சாகட்டும்..
அவரின்
அந்தஸ்து சொத்தெல்லாம்
இப்படி தான் வந்ததென்றால்
கடல்பொங்கி
எல்லாம் கொண்டு போகட்டும்!!!