என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Friday, November 22, 2013

உனக்கு ஆயிரம் நன்றிகள்

அன்பை வெளிப்படுத்திய பின்
அந்த அவஸ்தைகள்
எப்படியிருக்கும் என்பதை
அநுபவபூர்வமாக உணரச் செய்தாய்...

திக்கு திசை தெரியாதிருந்த நான்
இன்று உன் திசை மட்டும்
பார்த்தபடி
பயித்தியக் காரியாய் இருக்கின்றேன்..

அடிவயிற்றிருந்து
எழும் ஒருவித
பயமும், தவிப்பும் நீ
வருவாயா இல்லையா
என்ற திண்டாட்டமும்
என்னை நிலைகுலையச் செய்கிறது!

ஒவ்வொரு காலையும்
உன்னுடன் என்ன பேசணும்
என்று எண்ணியே ஆவலுடன் வருகின்றேன்..

ஆனால் நீயோ
தினமும் ஏமாற்றி
என் நினைவுகளை
மழுங்கடிக்கிறாய் உயிரே...

உன்னுடன் சாப்பிடுவதற்காகவே
காலைகளில் பசியுடன் வருகின்றேன்
எனினும்
நீயில்லாத போதுகளில்
பசி எங்கே நினைவிருக்கின்றது?

பகல் பொழுதுகளிலும்
பசிக்கவில்லை.. பிறருக்காக
தவிர்க்க இயலவில்லை
ஆதலால் சாப்பிடுகிறேனடி
உணவுடன் சேர்த்து
உன் நினைவுகளையும்!

ஏன் எனக்குள்
இந்த மாற்றங்கள்..
உன்னைப் பற்றிய
நினைவுப் போராட்டங்கள்?

நாளை வருவாய் என்ற
நம்பிக்கை தீர்ந்து
நாளையாவது வருவாயா
என்று புலம்பச் செய்தவளே..

உனக்கு ஆயிரம் நன்றிகள்
என்னை மீண்டும்
கவியெழுத வைத்ததற்கு!