மகனே!
மாதங்கள் சில கழிந்தால்
மண்ணில் நீ பிறந்திடுவாய்..
கருவறை இருட்டைவிட்டு
வெளியுலகம் வந்திடுவாய்!
உன்னை என்னில் ஏந்தியபின்
உள்ளுக்குள் எத்தனை
பயமிருந்தது தெரியுமா?
ஆனால்
வரட்டுப் பிடிவாதங்கள்
வாழ்க்கைக்கு உதவாது என்பதால்
வாழ முடிவெடுத்தேன்
உனக்காக கண்ணா!
காலப் பேரலை என்னைக்
காயப்படுத்திப் போட்டபின் - உன்
நல் வரவொன்றையே
நாளும் எதிர்பார்க்கிறேன்!
முடிந்தவரை மட்டுமல்ல
முடிவு வரை முயற்சித்தேன்
ஆழ்கடல் போன உன் தந்தை
அந்திமத்தை தழுவினாரே!
வாழ்க்கையோடு நான்
முரண்பட்ட போதெல்லாம்
உன்னைக் காட்டி
இயற்கை என்னை
வாழச் சொன்னது!
உன் எதிர்கால வாழ்வெண்ணி
உள்ளுக்கள் குமைகின்றேன்..
உறவுகள் யாரும்
உண்மையாயில்லை..
நட்பு கொண்டவர்கள்
நடிக்கின்றார்கள்..
தனவந்தர்களிடம்
தாராள மனமில்லை..
கோடீஸ்வரர்களிடம்
கொடுக்கும் இதயமில்லை!
கண்ணா
புரிகிறதா உன் தாயின்
புலம்பல்கள்?
மகனே..
இந்த குரூர உலகில்
உன்னை பிரசவிப்பதற்காய்
நாளை எண்ணில் கோபப்படாதே
ஆத்திரப்படாதே!
ஏனெனில்
நான் புரட்சித் தாயல்ல..
வாழ்வாதாரம் இழந்து
வாழும் திக்குத் தெரியாத
ஓர் ஏழைத்தாய்!!!