என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Thursday, March 15, 2012

லயத்து வீடும் கரத்தை மாடும்

கொழுந்த நாம பறிச்சு பறிச்சே
கையி காலு முறிஞ்சி போச்சி
தேங்கா மாவு குதிர வெல
ஒழக்கிறதும் எரிச்சலாச்சு

சப்பாத்து இன்றி போனதால
புள்ள படிப்பு பாழா போச்சி
பட்டணம் போன மூத்தவனின்
சம்பளமும் கொறஞ்சி போச்சி

மானியம், கடனுதவி
அர்த்மெல்லாம் பிழச்சி போச்சி
வாழையடி வாழையாக
கஷ்டங்களே நிலைச்சி போச்சி

நம்பிப் போட்டோம் வாக்குகள
எல்லாமே மோசம் போச்சி
தோரேமாரின் வேஷம் எல்லாம்
நல்லாவே வெளுத்துப் போச்சி

லயத்து வீடும் கரத்தை மாடும்
எங்களுடைய சொத்தாப் போச்சி
மாடி வீடும், மஹத்தியா பட்டமும்
அவங்களோட சேர்ந்துப் போச்சி

குடிக்கலாம்னு பாத்தோமே
கொஞ்சமாவது கஞ்சி வச்சி
கூரை ஓட்டை தண்ணி வந்து
அடுப்பும் இங்கு நூந்து போச்சி!!!

ஏழைத் தாய்

மகனே!
மாதங்கள் சில கழிந்தால்
மண்ணில் நீ பிறந்திடுவாய்..
கருவறை இருட்டைவிட்டு
வெளியுலகம் வந்திடுவாய்!

உன்னை என்னில் ஏந்தியபின்
உள்ளுக்குள் எத்தனை
பயமிருந்தது தெரியுமா?
ஆனால்
வரட்டுப் பிடிவாதங்கள்
வாழ்க்கைக்கு உதவாது என்பதால்
வாழ முடிவெடுத்தேன்
உனக்காக கண்ணா!

காலப் பேரலை என்னைக்
காயப்படுத்திப் போட்டபின் - உன்
நல் வரவொன்றையே
நாளும் எதிர்பார்க்கிறேன்!

முடிந்தவரை மட்டுமல்ல
முடிவு வரை முயற்சித்தேன்
ஆழ்கடல் போன உன் தந்தை
அந்திமத்தை தழுவினாரே!

வாழ்க்கையோடு நான்
முரண்பட்ட போதெல்லாம்
உன்னைக் காட்டி
இயற்கை என்னை
வாழச் சொன்னது!
உன் எதிர்கால வாழ்வெண்ணி
உள்ளுக்கள் குமைகின்றேன்..

உறவுகள் யாரும்
உண்மையாயில்லை..
நட்பு கொண்டவர்கள்
நடிக்கின்றார்கள்..
தனவந்தர்களிடம்
தாராள மனமில்லை..
கோடீஸ்வரர்களிடம்
கொடுக்கும் இதயமில்லை!

கண்ணா
புரிகிறதா உன் தாயின்
புலம்பல்கள்?

மகனே..
இந்த குரூர உலகில்
உன்னை பிரசவிப்பதற்காய்
நாளை எண்ணில் கோபப்படாதே
ஆத்திரப்படாதே!

ஏனெனில்
நான் புரட்சித் தாயல்ல..
வாழ்வாதாரம் இழந்து
வாழும் திக்குத் தெரியாத
ஓர் ஏழைத்தாய்!!!