என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Wednesday, December 25, 2013

நீ என்ன செய்வாய் பாவம்!

நீயும் நானும்
அமர்ந்திருந்து பேசும்
அந்த படிக்கட்டு
இன்று ஏனோ வெறுமையாக!

உன் முகம் பார்த்தபடியே
நானிருக்கும் பொழுதுகள்
நீயில்லாத இன்று கசப்பாக!

பலர் சுற்றியிருந்த போதும்
நான் மட்டும்
இந்த குரூர உலகில்
தனித்து விடப்பட்டதாய்
உணர முடிந்தது என்னால்..
இந்த மாற்றங்கள் எல்லாம்
ஏற்பட்டதெனக்கு உன்னால்!

உன் அருகேயிருந்து
பேசும் அழகிய தருணங்கள்..
இன்று ஆயிரம் முறை
தோன்றி மறைந்தது
தெரியுமா உனக்கு?

காலை, பகல், மாலை
எல்லாம் உன்னோடு
 செல்ல காத்திருப்பேனே
அந்த சுகம்
இன்று சுமையாகிப் போனதில்
ஆச்சரியம் இல்லை

உனக்கு இப்படியெல்லாம்
இருந்திருக்காது..
ஏனெனில்
இந்த அவஸ்தையை
ஆரம்பித்து வைத்த
பாவி நான் தானே.
நீ என்ன செய்வாய்
பாவம்!

என்னவென்று தெரியவில்லை

என்னவென்று தெரியவில்லை
ஒருநாளும் இல்லாமல்
இன்று நேரகாலத்துடன்
போக வேண்டும்
போல் இருக்கின்றது

தலையணையில்
முகம் புதைத்து
அழுது தீர்க்க வேண்டும்
போலிருக்கின்றது

நண்பர்களிடமெல்லாம்
மன்னிப்பு கேட்டு
மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்
போலிருக்கின்றது

எங்கள் வீட்டுக்குப் போய்
உம்மாவின் மடியில்
தலை வைத்துப் படுக்க வேண்டும்
போலிருக்கின்றது

வாப்பாவுடன் எல்லோரும் அமர்ந்து
அனைவரும் ஒன்றாக சாப்பிட வேண்டும்
போல் இருக்கின்றது

மீண்டும் சிறுகுழந்தையாய் மாறி
என் தம்பி, தங்கையுடன்
செல்லச் சண்டை போட வேண்டும்
போலிருக்கின்றது

இந்த உலகத்தையே மறந்து
பட்டாம்பூச்சி பிடித்து
விளையாடிக் களைக்க வேண்டும்
போலிருக்கின்றது!

கடற்கரைக்குச் சென்று
கடலிடம் என் சோகங்களை
கத்திச் சொல்ல வேண்டும்
போலிருக்கின்றது

யார் கண்ணிலும் படாமல்
யாருக்கும் வலி கொடுக்காமல்
செத்துப் போக வேண்டும்
போலிருக்கின்றது

உனக்கொன்று தெரியுமா?

என் இதய மாளிகையில்
சிம்மாசனமிட்டு
அமர்ந்திருக்கும்
என்னவனே!

உனக்கொன்று தெரியுமா?
நான் நினைத்திருந்தேன்
நீ என்னில்
கலந்துவிட்டதாக..

இல்லை
நான் தான்
உன்னுள்  தொலைந்துவிட்டேன்!

கனவில் வருகிறேன் என்று
சொல்லிச் சென்றவனே!
பின்பு
கனவைத் திருடி
என் தூக்கம் தின்றவனே!

இரவு பதினொரு மணிக்கு
வாசிக்க வைத்தவனே
உன்னை மட்டும்
சுவாசிக்க வைத்தவனே

வாரநாட்கள் ஐந்தும்
நரகம் போல் இருந்தது அன்று..
இன்று அவை
தேன் சொட்டுகிறது

சுவர்க்கமாகத் தெரிந்த
விடுமுறை நாட்கள்
இன்று தேள் கொட்டுகின்றது

அழகிய பூக்களை எல்லாம்
மாலை செய்து உனக்கு
சூட நினைத்தேன்
'பூவுக்கே பூ மாலையா?' என
பூக்கள் சொல்லிச் சிரித்தன என்றாய்

வான் பிறையை ரசித்திருந்தேன்
'உன்னவள் நறுக்கி வீசிய
நகத்துண்டை விடவா
நான் அழகு?' என்று கூறி அது
நாணிச் செத்தது என்றாய்

எங்கு பார்த்தாலும்
உன் முகம்
திரும்புகிற திசையெல்லாம்
உன் ஞாபகம் என்றாய்
இப்படி சொல்லிச் சொல்லியே என்னை
உனதாக்கிக் கொண்டாய்!!!

சாயம்போன இதயம்

மறந்து போனேன் எல்லாமே..
என் இயல்பை
என் இருப்பை..

உன்னை
உன் அன்பை..
எல்லாமே மறந்துபோனேன் இன்று!

எனக்கு என்ன ஆயிற்று?
ஏன் இப்படிக் கோபப்படுகின்றேன்
தனிமையை விரும்புகின்றேன்
சந்தோசத்தைத் தொலைக்கிறேன்..

உனது அருகாமை தந்த
அந்த இன்பம்
இன்று இன்பமாக இருக்கவில்லை..

என் கண்கள் கலங்குகின்றது
தொண்டை அடைக்கிறது
அழ வேண்டும்போல் தோன்றுகிறது
இதயம் விம்மி வெடிக்கின்றது!

என்னைப் புரிந்து கொள்ள
அவசியங்கள் இங்கில்லை..
ஆனால்
என்னை பிழிந்து கொல்ல
அதிகாரம் தந்தது யார்?

உன்னால் மட்டுமே பிடிக்கும் வாலிபம்
இன்று
ஏனோ வெறுத்தே போனது!

நீ சொல்வாயே அடிக்கடி
பச்சோந்திகள் பதுங்கியிருக்கும்
உலகம் இதுவென்று
உண்மைதான்!

அன்பின் விலாசம்
திசை தெரியாமல் போனது
சாப்பிடும் போதும்
மன இறுக்கம் இருந்தது

எதிர்பார்ப்புகள் எல்லாம்
ஏமாற்றம் அடைந்தால்
அன்பின் முகவரியும்
அழிந்தல்லவா போய்விடும்?

அகத்தில் உள்ளதை
முகத்தில் கண்டுவிட்டாய்
மறக்க முயன்றும்
தோற்றுத்தான் போனேன்

பயமாயிருக்கின்றது
என் வாழ்க்கை முழுவதும் இப்படி
தோற்றுப் போவேனோ என்றெண்ணி!

சுயநல வேட்கையில்
சுற்றியிருக்கும் சொந்தங்கள்
எதிரியை மட்டுமல்ல
எதிரே இருப்பவரையும் குறிபார்க்கிறது..

கழித்தது எப்படியோ நீ
கடந்த காலங்களை..

வாழ்வென்றால்
ஆயிரமிருக்கும் என்று
நீ வார்த்தையில் சொல்லிவிடலாம்

ஆனால்
காயப்பட்ட உள்ளத்துக்கும்
சாயம்போன இதயத்துக்கும்தான் தெரியும்
வலியின் ஊடுறுவல்கள்!!!

சந்தர்ப்பங்கள்

எத்தனை இன்பம்
உன்னுடன் நான் பேசிவிட்டால்..

மனசெல்லாம் பூ பூக்கிறது..
தென்றல் தாலாட்டுகிறது..
பாரமாக இருந்த இதயம்
பஞ்சாக பறக்கிறது!

நிறைய பேச வேண்டும்
உன் கண்கள் பார்த்து
உன் விரலைப் பிடித்து
உனதருகே இருந்து
தனிமையில் நிறைய பேச வேண்டும்

நான் இழந்தவை பற்றி
என் எதிர்காலம் பற்றி
என் ஆசைகள் பற்றி
என் கனவுகள் பற்றி
என் அன்பு பற்றி
என்னைப் பற்றியெல்லாம்
நிறைய பேச வேண்டும்

சந்தர்ப்பம் வருமா.. அவை
எப்போதும் போல
எனக்கு சதி செய்யுமா?

அல்லது
தருணம் பார்த்து யாராவது வந்து
என் வயிற்றெரிச்சலை
கொட்டிக் கொள்வார்களா?

உன்னுடன் பேசுவதற்கான
சந்தர்ப்பங்கள் தானாய்
உருவாகாது..
நாம் தான்
உருவாக்க வேண்டும்...

நான் உருவாக்கிக் கொள்வேன்
நீ???

சமுத்திரக் காதல்

அழுகிக் கிடக்கும்
மனத் திரையில்
மறுபடி மறுபடியும்
அவன் நினைவுகளே
வந்து விழுகின்றது!

ஒரு சமுத்திரமாக
ஆகிவிட்டிருந்த
என் காதல்
சொட்டுச் சொட்டாக
வடிந்து ஓடுகிறது!

குருதி எங்கும்
தீப் பிடித்து
என் இயலாமையை
மேலும்
பறைசாற்றுகின்றது!

நான் செய்த தவறுகள்
எல்லாம் ஒன்றுகூடி
மொத்தமாய் என்னை
வதைத்துத் தின்கின்றது!

விதியிடமிருந்து
தப்பி வந்த பொழுதுகள்
கூர் நகம் கொண்டு - என்
குரல்வளை பிடிக்கின்றது!

உன்னைப் பற்றியே இரகசியம் பேசுகிறேன்!

நீ வரமாட்டாய் என்று
நான் உறுதி கூறினாலும்
என் மனது அடம்பிடித்து
என்னை வதைக்கிறது!

விடிந்தும் விடியாத
இந்த காலைப்பொழுதில்
கீச்சிட்டுக் கொண்டிருக்கும்
ஊர்க் குருவியிடம்
உன்னைப் பற்றியே
இரகசியம் பேசுகிறேன்!

இதயத்தில் சுழன்றடிக்கும்
சூறாவளிக்கு
நீ தந்த கவிதைகளைத்தான்
கவசமாக காட்டிக் கொண்டிருக்கிறேன்!

என் வீட்டு முற்றத்தில்
எப்போதும் போல் பூத்திருக்கும்
வாசமில்லாத மலர்களுக்கும்
இப்போதெல்லாம்
வணக்கம் கூறி புன்னகைக்கிறேன்!

மார்கழிக் குளிரால்
வெடவெடக்கும் என் மேனிக்கும்
உன்னால் சிறகடித்து
படபடக்கும் என் இதயத்துக்கும்
உன் நினைவுகளை அள்ளியெடுத்து
போர்த்திக் கொண்டிருக்கிறேன்!






நீயேதான்

ஒரு
பூர்வீகத்தின் காலடியில்
புதைந்து கிடந்த
என் இதயத்தைக்
கண்டுபிடித்து
தூசு தட்டி எடுத்தது யார்?
நீதான்!

அமில விஷங்களால்
அழுகியிருந்த
என் மனதை
அள்ளியெடுத்து
பாதுகாத்து பத்திரப்படுத்தியது யார்?
நீதான்!

திக்குகள் தெரியாமல்
விக்கி நான் தவித்தபோது
தடுக்கி நான் விழுந்து விடாமல்
தட்டிக் கொடுத்தது யார்?
நீதான்!

இயலாமையின் உச்சத்தில்
இடிந்து போயிருக்கையில்
இது பிழை என்று என்னிடம்
இனிமையாக எடுத்துரைத்தது யார்?
நீதான்!

மனிதநேயம் செத்துவிட்டதாய்
மனதளவில் மரித்திருந்தபோது
மயிலிறகாய் மனதுக்கு
ஒத்தடம் தந்தது யார்?
நீயேதான்!

ஆனால்
இன்று..
என்னைப் பிரிந்து
கொல்லாமல் கொன்று
மீண்டும் மரணிக்கச் செய்தது யார்?
அதுவும் நீயேதான்!



உலகுக்கே கத்திச் சொல்ல வேண்டும்

ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு நொடியும்
உன் மேல் நான் கொண்ட
பாசம் கூடிக்கொண்டே போகிறது

என்னவென்றே தெரியவில்லை
உன்னை அப்படியே
வைத்தகண் வாங்காமல்
பார்த்தவாறே இருக்க வேண்டும்
போலிருக்கிறது

உனது பேச்சும்
நடத்தையும்
சிரிப்பும்
என் இதயத்துக்குள்
பசுமரத்தாணி போல
பதிந்தாகிவிட்டது

சிறு குழந்தைபோல
நீ சொல்லும்
கதைகளை
முழுநாளும் கேட்டுக்கொண்டே
இருக்க வேண்டும்

எப்போதாவது வந்துபோகும்
உன் கோபத்துக்கும்
உனக்கும்
நான் கட்டுப்படுவது
எனக்கு ரொம்பப் பிடிக்கிறது

எனது அன்பை
நான் வெளிப்படுத்துவது
உனக்கு
எரிச்சலாகவோ
அலட்டலாகவோ
இம்சையாகவோ
தொல்லையாகவோ இருக்கலாம்..

ஆனால்
அதற்காகவெல்லாம்
நான் பேசாமல் இருக்கப் போவதில்லை

உன்னுடன் நிறைய பேச வேண்டும்
உன் அன்பைப் பெற வேண்டும்

எனக்காக நீ  இருக்கிறாய்
என்பதை உலகுக்கே கத்திச் சொல்ல வேண்டும்!!!

நானறியேன்..

எனக்கானவனே!
எனக்குள் உதிக்கும்
உன் மீதான அன்பை
உன்னால்
தாங்க முடியவில்லை என்கிறாய்..

நிறைய பாசம் வைத்தால்
பிரச்சினைகள் வரும் என்கிறாய்..

அதை எந்த அர்த்தத்தில் நீ
சொல்கிறாய் என்பதை
நானறியேன்..

நானும், நீயும்
பிரச்சினை படாதவிடத்து
மரணத்தைத் தவிர நம்மை
பிரிக்க சக்தயுடையோர் யார்?

நான்...
என் நேசம்...
என் இதயம்...
இவையெல்லாம்
வேண்டும் என்கிறாயா?
வேண்டாம் என்கிறாயா?
எனக்குப் புரியவில்லை

என் காதலை
நான் ஒருபோதும்
வலுக்கட்டாயமாக
காட்டப் போவதில்லை

ஒவ்வொரு தாக்கத்துக்கும்
எதிரானதும் சமமானதுமான
மறுதாக்கம் இருந்தால்தான்
அந்த நேசிப்பின் ஆயுள் கூடும்...

உயிரே
என்னுள் உற்பத்தியாகும்
இந்த அன்பை
நீ வெறுக்கின்றாயா?

குளிரெடுக்கும் என் இதயம்
உன் இதயத்தைத் தானே எதிர்பார்க்கிறது?

அது நிம்மதியாக
உறங்குவதற்;கு உன்
மார்ச்சூட்டைத்தானே நிதம் கேட்கிறது?

நீ இல்லாதுபோனால்
நான் இல்லை..
ஆனால் நானில்லை
என்றால்
உனக்கு பிரச்சினைகளே இல்லையல்லவா?

தயவு செய்து என்னிடம்
பேசாமல் மட்டும் இருந்துவிடாதே..

உனக்கு என்னைப் பிடிக்கவில்லை
என்றால்
கூர் வாள் எடுத்து
என் இதயத்தை குத்திக் கிழித்துவிடு..

அப்படியே மன்டியிட்டு விழுந்து
உன் காலடியிலேயே
செத்துப் போகிறேன்!!!

Tuesday, December 3, 2013

சுருதி இல்லாத பாடல்

சுருதி இல்லாத பாட்டைப் போல்தான்
நான் பட்ட பாட்டையும்
சொல்ல வேண்டியிருக்கிறது!

காதலித்தால்
கவிதை வருகிறதோ இல்லையோ
கட்டாயம்
கண்ணீர் வருகிறது!

பிரிவின் துயரத்தை
இனியும் தாங்க முடியாது
என்னால்!

எத்தனை நாளைக்குத்தான்
என் இதயத்தை
நானும் ஏமாற்றித் தேற்றுவது?

நீ...
உன் குடும்பம்..
உன் சூழல்.. யாவும்
என் நினைப்பை விட்டும்
உன்னை தூரமாக்கியிருக்கிறது!

நான்..
என் தனிமை...
என் அன்பு.. எல்லாம்
உன் நினைப்பால்
மனதை ஈரமாக்கியிருக்கிறது!

உன் உள்ளத்தின் ஓரத்தில்
நான் வீற்றிருப்பதை அறிவேன்..
கண்ணால் காணாமல்
கருத்தொருமித்து வாழலாம் என்றாயே..

உன்
தத்துவங்களின்
ஞாயத்தை புரியுமளவுக்கு
எனக்கு
வயதுமில்லை
அறிவுமில்லை!

உறவில்லா மலரே

உயிருக்குள் பூத்த
உறவில்லா மலரே
உன்னிடம் எதைப்பார்த்து
உருக்குலைந்து போயிருக்கிறேன்?

நீயில்லா நிமிடங்களின் வலியை
நிஜமாகவே உணரச் செய்தவனே
உனக்குத் தெரியுமா?
இப்போதெல்லாம் - என்
சிந்தையில் நிறைந்த
சிறைக்கைதி நீதான் என்று?

உன் ஞாபகங்கள் சுமந்தபடி
எப்படியோ கழிகின்றன
எனதான நிமிடங்கள்!

வருவாயா இல்லையா
வரவேண்டுமே... என்று
எனதுள்ளம் ஒவ்வொரு நொடியும்
கிட்டத்தட்ட ஆயிரம் தடவை
துடிக்கிறது தெரியுமா?

சாப்பிடும் போதும்
தூங்கும் போதும்
இருக்கும்போதும் நடக்கும்போதும்
வீட்டிலும், அலுவலகத்திலும்
நீ தான் இருக்கிறாய்
என் இதயத்துக்குள்!

ஆனபோதும்
நீ என்னை, என் மனதை
களவாடியதை நான்
எப்படி எடுத்துரைப்பேன்?

எதுவுமே இல்லாமல்
ஏற்பட்ட நம் உறவு
எதுவுமே இல்லாமல்தானே
எட்டி நடக்கிறது?

அப்படியிருக்க
என் நினைவுகள் கொஞ்சமாவது
உனக்குள்ளும் இருக்கிறதா?

இடைவெளி நிரப்புவாயா

பரீட்சையின்போதும்
உன்
பாச முகம் கண்முன்னே

பதற்றத்தின் போதும்
உன் உருவம் நிழலாடுது
என் முன்னே!

தலைக்குனிந்தெழுதுது பேனா
தலைநிமிர்ந்து பார்ப்பது நானா
என்று எனக்குள் ஒரு அவஸ்தை!

என்ன செய்கிறாய்
என்று தெரியாமலேயே
என் எண்ணங்கள் சுற்றித் திரிகிறது

மேலெழும் நினைவலைகள்
மீண்டும் சுழியடித்து
என் உயிருக்குள் உன்னை
எட்டிப் பார்க்கிறது!

எனது இதயத்தில் எழுந்துள்ள
இடைவெளியை நீ
இடைவெளி நிரப்புவாயா - இல்லை
இரட்டிப்பாக்குவாயா..???

தவித்துத் தணியும் என் மனதை
என்ன தந்து தீர்க்கப்போகிறாய்.....
நீ வந்தபின் என்னிடம்
நன்றாக மாட்டி சாகப்போகிறாய்!