என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Friday, November 22, 2013

உனக்கு ஆயிரம் நன்றிகள்

அன்பை வெளிப்படுத்திய பின்
அந்த அவஸ்தைகள்
எப்படியிருக்கும் என்பதை
அநுபவபூர்வமாக உணரச் செய்தாய்...

திக்கு திசை தெரியாதிருந்த நான்
இன்று உன் திசை மட்டும்
பார்த்தபடி
பயித்தியக் காரியாய் இருக்கின்றேன்..

அடிவயிற்றிருந்து
எழும் ஒருவித
பயமும், தவிப்பும் நீ
வருவாயா இல்லையா
என்ற திண்டாட்டமும்
என்னை நிலைகுலையச் செய்கிறது!

ஒவ்வொரு காலையும்
உன்னுடன் என்ன பேசணும்
என்று எண்ணியே ஆவலுடன் வருகின்றேன்..

ஆனால் நீயோ
தினமும் ஏமாற்றி
என் நினைவுகளை
மழுங்கடிக்கிறாய் உயிரே...

உன்னுடன் சாப்பிடுவதற்காகவே
காலைகளில் பசியுடன் வருகின்றேன்
எனினும்
நீயில்லாத போதுகளில்
பசி எங்கே நினைவிருக்கின்றது?

பகல் பொழுதுகளிலும்
பசிக்கவில்லை.. பிறருக்காக
தவிர்க்க இயலவில்லை
ஆதலால் சாப்பிடுகிறேனடி
உணவுடன் சேர்த்து
உன் நினைவுகளையும்!

ஏன் எனக்குள்
இந்த மாற்றங்கள்..
உன்னைப் பற்றிய
நினைவுப் போராட்டங்கள்?

நாளை வருவாய் என்ற
நம்பிக்கை தீர்ந்து
நாளையாவது வருவாயா
என்று புலம்பச் செய்தவளே..

உனக்கு ஆயிரம் நன்றிகள்
என்னை மீண்டும்
கவியெழுத வைத்ததற்கு!

காத்திருக்கச் செய்தாயடி தோழி..

காத்திருக்கச் செய்தாயடி தோழி..
உன் வருகைக்காக
உன் சிரிப்பிற்காக
உன் குரலுக்காக
என்னை காத்திருக்கச் செய்தாயடி!

உனக்கு மெஸேஜ்
பண்ணிய பிறகு
பதில் வரும் என்று
என்னை காத்திருக்கச் செய்தாயடி!

உனக்கு கோல் பண்ணிய பிறகு
நீ பேசுவாய் என்று
என்னை காத்திருக்கச் செய்தாயடி

நான் என்ன செய்யட்டும்
நீயே சொல்

நீ சூடும்
பூக்களாக மாறி விடட்டுமா?
உன் கையில் வளையலாக
ஆகி விடட்டுமா?

நீ சுவாசிக்கும் மூச்சாக
மாறி விடட்டுமா?
இல்லை நீ குடிக்க
ப்ளேன்டீயாக
ஆகி விடட்டுமா?

என்ன செய்யட்டும்
நீயே சொல்!

என்ன இது
எனக்குள் இனம் தெரியாத
ஒருவித இன்பம்..

அந்த
இன்பத்தினுள்ளே
தாங்க இயலாத ஒரு துன்பம்?

முடியவில்லை பெண்ணே
வந்துவிடு

உனக்காக என் இதயம்
துடிப்பதை மறந்து விடாதே..
பிறகு அது
துடிப்பதை நிறுத்திவிட்டால்
வருந்திவிடாதே!

நீ இன்று வரமாட்டாய்

நீ இன்று வரமாட்டாய் என்று
நானெப்படி அறிவேன்?
நீ இல்லாவிட்டால்
நான் தீயாய் எரிவேன்!

உண்மையில்
நீ வர மாட்டாயா?
சேலை அணிந்த
ஒரு தேவதையாக
என் முன்னே தோன்ற மாட்டாயா?

எதிர்பாராத தருணமொன்றில்
குட்மோர்னிங்
என்று அழகாக சொல்லிக்கொண்டு
என்னிடம் வந்துவிட மாட்டாயா?

இல்லை!
நீ வரமாட்டாய்..

எனக்குத் தெரியும்!
காத்திருக்க வைப்பதிலும்,
பொய் சொல்லிச் சிணுங்குவதிலும்தான்
பாசத்தின் ஆழம் கூடும் என்று!

உன் குரல் கேட்ட பின்பு
குமுறிக் கொண்டிருந்த என் இதயம்
குளிர்ச்சியானது..
'எனக்காக செலவழிக்க
வேண்டாம் பாசம் மட்டும் போதும்'
என்பவளே
பாசத்தை தின்றும்
நேசத்தைக் குடித்தும்
உயிர் வாழலாம் என்கிறாயா?

அப்படியானால் வா
இந்த பிரபஞ்சத்தில்
நீயும் நானும்
ஒரு புள்ளியாய் மாறி
மணல் சோறு தின்னலாம்
மழையைக் குடிக்கலாம்
ஆகாயத்தை வாரியெடுத்து
அணிந்து கொள்ளலாம்
கடல் நீரா(ரி)ல்
கவிதை எழுதலாம்...

முழு உலகையும்;
கற்பனையில்
உலா வரலாம்...
என் மனசைத் திறந்து பார்
உனக்காக ஓராயிரம்
விண்மீன்களை சேமித்திருக்கிறேன்..

திறக்க முடியவில்லை என்றால்
உடைத்துப் பார்
நீ கோபத்தில் வீசிய சொற்களை எல்லாம்
சேர்த்து வைத்திருக்கிறேன்..

உன் மீதுள்ள பாசம்;
நிரம்பி வழியும்
என் இதயத்துக்கு - என்ன அணைக்கட்டு
போடப் போகிறாய்?

தயவுசெய்து
திங்கட் கிழமையாவது வாடி..
அது வரை என் மனசு கிடக்கும் 'வாடி'..!

மனமெனும் அருவி

அவ்வப்போது தோன்றும்
உணர்வுகளால்
சில வேளைகளில்
புத்தி பேதலிக்கிறது!

ஆனாலும்
தெரிந்து கொண்டு
மனது அவனை மட்டும்
காதலிக்கிறது!

வருவானா இல்லையா
என்று தெரியாமலேயே
மனது அவனுக்காய்
தவிக்கிறது!

வரமாட்டான் என்ற
உறுதியிருந்தாலும்
அவனை இதயம்
எதிர்பார்க்கிறது!

அன்பில்
அரவணைப்பில்
ஆறுதலில் எல்லாம்
அவனின் விம்பம்
வந்தாடுகிறது!

தூரே இருக்கும்
அவனிடம்
மனம் எனும் அருவி
பாய்ந்தோடுகிறது!

பாறாங் கல்லாய்
இருக்கும்
என் சிறு இதயம்
அவனின் நினைப்பில்
லேசாகிறது!

எனக்குள் உள்ள
அணுக்கள் எல்லாம்
அவனின் மூச்சை
சுவாசிக்கிறது!!!

வேதனைத் தீ

பல நாட்கள் ஆயிற்று
உனை நானும் மறந்தின்று
ஆனாலும் சில சமயம்
உன் நினைவே மருந்தொன்று!

இதயத்தால் நேசித்தேன்
இயல்பாயுனை சுவாசித்தேன்
மறந்தாயே நீ என்னை
எரித்தாயே என் நெஞ்சை

சொல் கத்தி பட்டெந்தன்
இதயத் துகள் சிதறியதே
சொல் பெண்ணே ஏன் சொன்னாய்
என் உள்ளம் பதறியதே

எதிர்காலம் இனித்திடுமா
நீயின்றி கழிந்திடுமா
எனக்குள்ளே தீ மூட்டும்
நினைவுகளும் அழிந்திடுமா?

அடி பெண்ணே நீ என்னை
மறந்தெங்கு சென்றாயோ
மறக்காமல ;நான் இருக்க
மாயங்கள் செய்தாயோ?

உன் வதனம் எனக்குள்ளே
வேதனைத் தீ மூட்டிடுதே
நாமிருந்த மரநிழலோ
என் மனதை வாட்டிடுதே

என் பேனை மை என்றும்
உனை பற்றியே எழுதும்
நீ நலமாய் வாழ்வதற்கு
வரம ;கேட்பேன் நான் தொழுதும்!!!

வஞ்சகம்

வாஞ்சையுடன் பழகுவதற்கு
சிலராலும் முடிவதில்லை
வஞ்சகமாய் நடிப்பதற்கு
பலராலும் முடிகிறது!

உள்ளத்தால் நெருங்குவதற்கு
சிலரால்தான் முடிகிறது
உள்ளத்தை உடைப்பதற்கு
பலராலும் இயலுகிறது!

எந்தப் புற்றில்
எந்தப் பாம்பு உள்ளதென்று
யாரறிவார்?

அதுபோலத்தான்
யார் மனதில்
என்ன உள்ளதென்பதும்!

தலைகுனிந்து பொறுத்ததெல்லாம்
தலை நிமிர்ந்து
நிற்பதற்குத்தான்!

எமக்காக ஒரு ஜீவன்
எப்போதும் இருக்க வேண்டும்
அந்த எதிர்பார்ப்பில்தானே
வாழ்க்கை அடங்கியிருக்கிறது?

நட்பு என்ற வார்த்தை
நயவஞ்சகத்தை ஏற்றிருப்பதால்
சகோதர உறவுகள்தான்
சாகும் வரை தொடருமென்பேன்!

என் வாழ்க்கை

தரணியிலே தனியாக
நான் வாழச் செய்யாமல் - நல்
பெற்றோரை தந்திட்ட
இறைவனுக்கு பல நன்றி!

கருவுற்ற நிமிடம் முதல்
கண்ணுங் கருத்துமாயிருந்து
காலப்போக்கில் அழுகையினூடு
தாயென்னை ஈன்றெடுத்தாள்!

அழுகை எல்லாம் ஆனந்தமாய்
ஆனபொழுது வந்தபோது
கண்குளிர என் தந்தை
வாரி என்னை முத்தமிட்டார்!

நிலவு காட்டி சோறு ஊட்டி
நித்தமும் பாசம் காட்டி
பாராட்டி சீராட்டி
பார்த்தாரே என் உம்மா!

தோளில் தூக்கி மார்பில் ஏற்றி
தொட்டில் வாங்கி தூங்க வைத்து
நான் விழித்தால் தான ;விழித்து
காத்தாரே என் வாப்பா!

பாடசாலை போகையிலே
ஆள்காட்டி விரல் பிடித்து
உம்மாவுடன் சென்றதெல்லாம்
அடி மனசில் அப்படியே!

ஓதலுக்கு செல்வதற்கு
பயத்தோடு வாப்பாவின்
பின்னாலே மறைந்து நின்று
சென்றதெல்லாம ;நினைவிருக்கு!

தங்கையும் தம்பியும்
தனியாக ஒழிந்து கொண்டு
தேட வைத்த பொழுதெல்லாம்
பசுமையாய் பதிஞ்சிருக்கு!

எல்லாமே நினைவிருக்க
என் நெஞ்சில் நெறஞ்சிருக்கு
என் குடும்ப அன்பினில்தான்
என் வாழ்க்க அடங்கிருக்கு!!!

தூக்கம்

என்னால் தாங்க முடியவில்லை
பாடாய் படுத்துகிறது நோயே
பாடுபட வைத்திற்று தாயை!

நான் குணமாக
வேண்டும் என்றா
இத்தனை நேர்ச்சைகள்
இதர நோன்புகள்
ஏனும்மா..
என்னால் தாங்க இயலவில்லை!

கண் வருத்தம் வந்தாலும்
கலங்காதிருக்கும் என் வாப்பா
என் வருத்தம் என்றதுமே
எப்படி ஒடிந்து போனார்?

தங்கச்சி...
நீ ஏனம்மா அழுகிறாய்
எனக்கு ஏதும் ஆகாது!
உம்மாவுக்கும் வாப்பாவுக்கும்
ஆறுதல் கூற வேண்டிய நீயே
இப்படி அழலாமா?
வேண்டாம் கண்களை
துடைத்துக்கொள்!

தம்பி..
நீ ஏனடா
அப்படிப் பார்க்கிறாய்?
எல்லோரையும் பார்க்க வேண்டிய நீ
என்னைப் பார்த்தே
மனமுடைந்துவிடாதே!

உங்கள் பாசம்
இருக்கும் வரை
என் உயிரும்
பத்திரமாயிருக்கும்
உங்கள் உள்ளங் கைகளுக்குள்!

கலங்காதீர்கள்
அப்பால் செல்லுங்கள்
எனக்கு
தூ..க்..க..ம்  வருகிறது!!!

மருந்துண்டா?

பல வருடம் கழிந்தாலும்
பலி சொல்லில் குறைவில்லை
அகதியில்லை நாம் என்று
சொல்லும் நாள் வரவில்லை

ஓடோடி வந்ததெல்லாம்
ஓருயிரைக் காப்பதற்கே
நாடோடி என்றெம்மை
நினைத்திங்கே பார்ப்பதற்கா?

வயலோடு ஏர் உழுது
வாய்க்காலில் நீர் பிடித்து
அமுதுண்டு வாழ்ந்தவர்தாம்
அழுதபடி கிடக்கின்றோம்

குழந்தைகள் குடும்பம் என
குதூகலமாய் வாழ்ந்துவிட்டோம்
குற்றுயிராய் கிடக்கின்றோம்
குறைப்ட்டு வாழ்கின்றோம்

ஒரு தாயின் பிள்ளைகளாய்
ஒரு வீட்டில் வாழ்ந்த நாங்கள்
ஒரு குடிசை தானுமின்றி
முகாம்களிலே வாடுகின்றோம்..

உடற் பிணியைத் தீர்ப்பதற்கோ
உத்திகளும் பல உண்டே
மனச் சுமையை தீர்ப்பதற்கு
மாமருந்து ஏதுமுண்டோ???

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா