என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Wednesday, December 14, 2011

அதிகாரத்தின் அடக்குமுறை

அதிகார வர்க்கத்தின்
அடக்கு முறையில்
அடிக்கடி
என் உரிமை நசுக்கப்படுகிறது!

தவறு செய்தது நீ..
செய்திடாத குற்றத்துக்காய்
குட்டுப்படுகையில்
ரத்தக்கொதிப்பு அதிகமாகிறது!

தன்மானம் பற்றி
அடிக்கடி அங்கலாய்க்கும் நான்
அவமானம் என்றால்
எப்படி பொறுப்பேன்?

உன் மீதுள்ள
கொலை வெறியை
அடக்குவதற்குத்தான்
அடிக்கடி கண்ணீரை
துணைக்கழைக்கிறேன்!


குற்றம் புரிந்த உன் மனது
குறுகுறுக்கிறதோ இல்லையோ
பாவம்பட்ட என் மனது
வேதனையால் புறுபுறுக்கிறது!

உன் பிழைகளை
நீயே அழிக்கவும்
அதில் ஏமாந்து
ஷஅவன்| விளிக்கவும்
என்ன காரணம்?

ஓ..
உன் சல்லாபத்தால்
எத்தனைப்பேரை
சறுக்க வைத்தாய் நீ!

புரிந்து விட்டதெனக்கு!

உன்னைப் போல்
மேலாடை விலக்கி
மேலதிகாரியுடன்
களவாய் திரிய
எனக்கும் முடிந்திருந்தால்...

சில நேரம்
என் பிழைகளும்
திரைக்குப் பின்
மறைக்கப்பட்டிருக்கலாம்..

எனக்கு கீழிருக்கும்
இன்னொருத்தியின்
உரிமை
மறுக்கபட்டிருக்கலாம்!

Sunday, December 11, 2011

நெருப்பு வாழ்க்கை

காலங்கள் கடந்தென்ன
நாமிங்கு கிடந்தென்ன
மாறியதா நம் வாழ்வின் கோலங்கள் - பசி
பட்டினி தாங்கவியலா ஓலங்கள்!

அடிமைகளாய் மாற்றப்பட்டு
அஃறிணையாய் நடாத்தபட்டோம்
வாழ்க்கையின் சுவையிழந்து தவிக்கின்றோம் - நாம்
வாழ்வதற்கே வழியின்றி துடிக்கின்றோம்!

லயத்தோடு வாழ்வுபட்டு
ஐந்தோடு அறிவும் கெட்டோம்
கொடிவினைபோல் நாமிங்கு வாழ்கின்றோம் - தினம்
இடி விழுந்து மரமாக வீழ்கின்றோம்!

மா வாங்க பணமில்லை
மருந்துக்கும் வழியில்லை
குழந்தைகள் விழிநீரால் எனை உறுத்த - கடன்
சுமையும் வந்தென்னை பயமுறுத்த!

மழை காலம் வந்தாலே
பரி;தவிக்கும் எம் சனங்கள்
மழை நாளில் நம் குடிசை ஓடொழுகும் - இங்கே
நட்டிருக்கும் பயிர் யாவும் கிடந்தழுகும்!

தலை நகரில் தரையெல்லாம்
பளிங்குபோல் பளபளக்கும்
எம் பரப்பில் பாதைகள் மேடுபள்ளம் - எப்போது
அதைக் காலம் மாற்றிச் செல்லும்?

துயர்துடைக்க வந்தவர்கள்
துரு மனதைக் கொண்டவர்தாம்;
எமக்காக குரல் கொடுப்போர் யாருண்டு - விதி
என்று சமாளிக்க ஆள் உண்டு!

எதிர்காலம் இருட்டாகி
நிகழ்காலம் வழிமாறி
நெருப்புக்கு நானின்று விறகானோம் - இந்த
வெந்தணலில் அழிகின்ற சருகானோம்!!!